விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசிடம் இருந்து இடத்தை பெற நடவடிக்கை முதல்–அமைச்சர் நாராயணசாமி தகவல்


விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசிடம் இருந்து இடத்தை பெற நடவடிக்கை முதல்–அமைச்சர் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:54 AM IST (Updated: 16 Aug 2017 4:54 AM IST)
t-max-icont-min-icon

விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசிடம் இருந்து இடத்தைப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒருங்கிணைந்த நீர் நிலைகள் மேலாண்மை திட்டத்தின் மூலமாக 20 ஏரிகள் மற்றும் 32 குளங்களை புனரமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நபார்டு வங்கி மூலம் ரூ.16கோடியே 76 லட்சம் அளிக்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.3கோடியே 83 லட்சம் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய புவியறிவியல் அமைச்சகத்தின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் ரூ.30 கோடி செலவில் புதுச்சேரி கடற்கரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.130 கோடியே 84 லட்சம் ஆதிதிராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 4 லட்சம் வீதம் 2,399 ஆதிதிராவிட பயனாளிகளுக்கு வழங்கப்ட்டுள்ளது. கல்வி மேம்பாடு, பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் 36,779 ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கு ரூ.30 கோடியே 57 லட்சம் அளவிற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு தேவையான நிதி ஆதாரத்தை கொடுத்து அத்துறை செவ்வனே செயல்பட இந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்பிடிக்கும் தடைக்காலம் 61 நாட்களாக உயர்த்தப்பட்டு, தடைக்கால நிவாரணமாக ரூ.8 கோடியே 92 லட்சமும், மழைக்கால நிவாரணமாக ரூ.5 கோடியே 22 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் வளர்ப்போருக்கு இடுபொருள் மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 177 பேருக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா திட்டத்தின் கீழ் 285 மாற்றுத்திறனாளிகள் கடந்த ஆண்டில் பயன் பெற்றனர்.

8–ம் வகுப்பில் இருந்து 10–ம் வகுப்பிற்குள் படிக்கும் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.25 ஆயிரத்திற்கான தேசிய சேமிப்பு பத்திரம் வழங்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவதற்கு புதிய தொழிற்கொள்கை ஒன்றை அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. பல்வேறு அரசுத்துறைகளில் 600க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதுச்சேரிக்கு வேலைவாய்ப்பும், கூடுதல் வருவாயும் கிடைக்கும் வகையில் கடல் வழியாக சரக்குகளை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல சென்னை துறைமுகத்துடன் புதுச்சேரி அரசானது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறைமுகத்திற்கு கடல்வழி சரக்கு பெட்டக போக்குவரத்து விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்குக் கலன்கள் மற்றும் மீன்பிடி படகுகள் சென்றுவர ஏதுவாக முகத்துவாரம் தூர்வாரி ஆழப்படுத்த டி.சி.ஐ. நிறுவனத்திற்கு ரூ.14 கோடியே 14 லட்சத்திற்காக பணி ஆணை வழங்கப்பட்டு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன.

நாங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்பு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சட்டம்–ஒழுங்கு வெகுவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ரோந்து போலீசார் 24 மணிநேரமும் ரோந்து பணிகள் மேற்கொண்டு வருவதால் 12 சதவீத குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் ரோந்திற்காக பறக்கும் புலிகள் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்த கும்பல் வேரோடு அழிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையும் அழிக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், கடலில் மூழ்கும் சுற்றுலா பயணிகளை மீட்கவும் காலாப்பட்டில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரசின் தொடர் நடவடிக்கையால் சுற்றுலா வரைபடத்தில் புதுச்சேரி முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாக மாறி வருகிறது. விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தேவைப்படும் நிலத்தை தமிழக அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம சுற்றுலா திட்டத்தின்கீழ் ஆலங்குப்பத்தில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பாரம்பரிய சுற்றுலா திட்டத்தின்கீழ் திப்புராயப்பேட்டை, சுண்ணாம்பாறு, அரிக்கன்மேடு, மற்றும் சின்னவீராம்பட்டினம் ஆகிய கடற்கரை பகுதிகளை அழகுபடுத்தும் பணி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனாமில் 3ம் எண் தீவில் மர நடைபாதை மற்றும் 5–ம் எண் தீவில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

விடுதலை போராட்ட வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. எங்கள் அரசு கடந்த ஆண்டில் பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சிப்பணிகளையும் செய்திருந்தாலும், அதேவேளையில் தடைக்கற்களை சாதனை கற்களாக மாற்றி மக்களுக்கு அறிவித்த திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றும் என்று உறுதி கூறுகிறேன். அதற்கு மக்கள் அனைவரும் தங்களது பேராதரவை தொடர்ந்து நல்க வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story