நோணாங்குப்பத்தில் பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு
அரியாங்குப்பத்தில் அரசு பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடையின் பெயர் பலகையை உடைத்து நொறுக்கினார்கள். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரியாங்குப்பம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் ஓரம் இயங்கி வந்த மதுக்கடைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபம் அருகே மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த ஒரு மதுக்கடை மூடப்பட்டது.
அந்த மதுக்கடையை அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியில் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அந்த மதுக்கடை நோணாங்குப்பம் படகு குழாம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
அங்கு மதுக்கடை திறக்க நோணாங்குப்பம் மற்றும் டோல்கேட் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மக்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அங்கு மதுக்கடை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்றுக் காலையில் வழக்கம்போல் அந்த மதுக்கடை திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நோணாங்குப்பம் மற்றும் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்து மதுக்கடையை சூறையாடினார்கள். மதுக்கடை பெயர் பலகையை அடித்து உடைத்து நொறுக்கினார்கள். மேலும் கடை ஊழியர்களை மதுக்கடையை மூடும்படி மிரட்டினார்கள். மேலும் புதுச்சேரி – கடலூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்யவும் முயன்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அங்கிருந்து மதுக்கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது. பின்னர் மதுக்கடை மூடப்பட்டது.