பெங்களூருவில் விடிய-விடிய கொட்டி தீர்த்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது


பெங்களூருவில் விடிய-விடிய கொட்டி தீர்த்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 16 Aug 2017 4:55 AM IST (Updated: 16 Aug 2017 4:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் விடிய-விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை வரை விடிய-விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெங்களூரு தெற்கு பகுதிகளில் கனமழை பெய்தது. மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதனால் ஜெயநகர், மாதவன் பார்க், வி.வி.புரம், கோரமங்களா, பசவனகுடி, லால்பாக், எச்.எஸ்.ஆர். லே-அவுட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவ்வாறு முறிந்த மரங்கள் வீடுகள் மீதும், வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் மீதும் விழுந்தன. இதனால் அந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.

விடிய-விடிய கொட்டி தீர்த்த மழையால் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தூங்க முடியாமல் பரிதவித்தார்கள். மேலும் வீடுகளுக்கு புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டார்கள்.

தனியார் பள்ளிக்குள் தண்ணீர் புகுந்தது

இதுதவிர எச்.எஸ்.ஆர். லே-அவுட், கோரமங்களா, சாந்திநகர், நாகவாரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்று காலையில் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்கள். எச்.எஸ்.ஆர். லே-அவுட் 1-வது செக்டாரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது. அங்குள்ள வகுப்பறைகளுக்குள் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளிக்கு உள்ளே இருக்கும் விளையாட்டு மைதானம் மழை நீர் தேங்கியதால் நீச்சல் குளம்போல் காட்சி அளித்தது.

சுதந்திர தினத்தையொட்டி நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து, பள்ளிக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டார்கள். இதுபோன்று, சாந்திநகரில் உள்ள அரசு பஸ் பணிமனைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களை வெளியே எடுக்க முடியாமல் டிரைவர்கள் சிரமத்தை அனுபவித்தார்கள்.

வாகனம் நிறுத்தும் இடத்திற்குள்...

கோரமங்களாவில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்திற்குள் மழைநீர் புகுந்து தேங்கி நின்றது. 5 அடி வரை மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள் மழைநீரில் மிதந்தன. இதுபற்றி அறிந்ததும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று மின் மோட்டார் மூலம் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இதற்கிடையில், நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது.

அந்த தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வராததால், பொதுமக்கள் ஆத்திரமடைந்தார்கள். பின்னர் தாங்களாகவே முன்வந்து பல்வேறு பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்கள். பின்னர் நேற்று மதியம் பல்வேறு இடங்களுக்கு சென்று முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டார்கள்.

மதநல்லிணக்கம்

மேலும் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் மற்றும் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டார்கள். ஆனாலும் பல பகுதிகளில் நேற்று இரவு வரை தண்ணீர் வடியாமல் தேங்கியே நின்றது.

பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. அந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் அந்த பகுதியில் இருந்த முஸ்லிம்களும் ஈடுபட்டனர். இது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பார்வையிட்டார்

இந்த நிலையில், மழை பாதித்த பகுதிகளுக்கு பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், மாநகராட்சி மேயர் பத்மாவதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டார்கள். அப்போது பல்வேறு இடங்களில் மழை பெய்தாலே, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தான் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதாகவும், வீடுகளை மழைநீர் சூழ்ந்து இருப்பதாகவும் மந்திரி கே.ஜே.ஜார்ஜிடம் பொதுமக்கள் குறை கூறினார்கள். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உறுதி அளித்தார்.

பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், நேற்று வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

மேலும் ஏராளமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பரிதவித்தார்கள். பெங்களூருவில் விடிய-விடிய கொட்டி தீர்த்த மழையால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

Next Story