வேடசந்தூரில், ஓட்டலின் 3–வது மாடியில் இருந்து தவறி விழுந்த பனியன் வியாபாரி சாவு
வேடசந்தூரில், ஓட்டலின் 3–வது மாடியில் இருந்து திருப்பூர் பனியன் வியாபாரி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒரு ஓட்டல் அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவர் பனியன் மட்டுமே அணிந்து இருந்தார்.
மேலும் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியேறி இருந்தது. காலும் முறிந்து இருந்தது. எனவே, அந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. நாய் ஓட்டலில் இருந்து புறப்பட்டு மார்க்கெட் ரோடு, சந்தைப்பேட்டை சென்று அங்கு நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த ஓட்டலில் தங்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த சதீஷ் (வயது 32) என்பவர் தான், பிணமாக கிடந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சதீஷ் திருப்பூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் ஆவார். பனியன் வியாபாரியான இவர், தனியார் மில்களுக்கு நேரடியாக சென்று பனியன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் பனியன் வாங்க நேற்று முன்தினம் வந்துள்ளார். பின்னர் வேடசந்தூரில் ஓட்டலின் 3–வது மாடியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அவர், 3–வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த அடிபட்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்து போன சதீசுக்கு, ஆனந்தி என்ற மனைவி உள்ளார்.