ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது


ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது
x
தினத்தந்தி 17 Aug 2017 3:45 AM IST (Updated: 17 Aug 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதி அனைத்து மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது முஸ்லிம்களின் புண்ணியதலமான ஏர்வாடி தர்கா. இங்கு மகான் குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ‌ஷகீது ஒலியுல்லா அடக்கமாகி உள்ளார். இந்த மகானின் சமாதியில் புனித சந்தனம் பூசும் உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 843–ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.

விழாவையொட்டி முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்த தண்ணீரால் தர்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. சந்தனக்கூட்டின் அடித்தளத்தினை ஆசாரி சமூகத்தினர் செய்து கொடுத்தனர். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகியவற்றை யாதவர்களும், ஆதிதிராவிடர்களும் அலங்கரித்தனர்.

அதைத்தொடர்ந்து தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதிதிராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி சந்தனக்கூடுக்கு வழிகாட்டியாக தீப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு அழகுபடுத்தப்பட்ட சந்தனக்கூடு நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் குடியிருக்கும் தைக்கா பகுதியில் இருந்து யானை, குதிரைகளில் இளம்பச்சை கொடிகள் ஏந்தி வர தர்காவை நோக்கி புறப்பட்டது.

ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க அனைத்து மத பக்தர்களின் ஆட்டம், பாட்டத்துடன் இரவை பகலாக்கும் வண்ண ஒளியில் சந்தனக்கூடு அழகுற வந்தது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக திகழ்ந்த சந்தனக்கூடு பல்லாயிரக்கணக்கான அனைத்து மத பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து தர்காவை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து வெள்ளிப்பேழையில் வைத்து எடுத்து வரப்பட்ட புனித சந்தனம் மகானின் சமாதியில் பூசப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் தேவதாஸ், ஆணைய உதவியாளர் தமிழரசு ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன.


Next Story