ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறக்கோரி ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்த போராட்டம்


ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறக்கோரி ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2017 4:15 AM IST (Updated: 17 Aug 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

நிலுவையில் உள்ள பணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறக் கோரி ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் அகில இந்திய அளவில் வருகிற 20-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குகிறார்கள்.

திருச்சி,

தெற்கு ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. திருச்சி கோட்ட தலைவர் ஜோசப் லூயிஸ் தலைமை தாங்கினார். தென்மண்டல தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் முத்துராமன், பொருளாளர் வெங்கடபெருமாள், துணை தலைவர் கவுதமன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுச்செயலாளர் முத்துராமன் கூறியதாவது:-

ரெயில்வேயில் கட்டிடம் கட்டுதல், தண்டவாளம் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளை செய்து வரும் நாங்கள் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) எதிர்க்கவில்லை. ஆனால் 30-6-2017-க்கு முன் டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கும், ஏற்கனவே தொடங்கப்பட்டு செய்து முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள ஒப்பந்த பணிகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்து இருப்பது எங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது.

வேலை நிறுத்த போராட்டம்

அகில இந்திய அளவில் சுமார் 10 ஆயிரம் ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள் ரெயில்வேக்காக இந்தியா முழுவதும் தொடங்கிய பல்வேறு திட்டப்பணிகள் பல கோடி ரூபாய் அளவிற்கு நிலுவையில் உள்ளது. இந்த பணிகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறக்கோரி எங்களது அகில இந்திய சங்கம் எடுத்து உள்ள முடிவின்படி வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குகிறோம். இதனால் ரெயில்வே கட்டிட பணிகள் பாதிக்கப்படுவதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story