மேகமலை அருவியில் இருந்து வரும் குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்


மேகமலை அருவியில் இருந்து வரும் குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 20 Aug 2017 10:45 PM GMT (Updated: 20 Aug 2017 8:01 PM GMT)

கடமலைக்குண்டு அருகே மேகமலை அருவியில் இருந்து வரும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் மேல் பகுதியில் தடுப்பணை கட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குமணன்தொழு, மேகமலை, பொன்னன்படுகை, சிங்கராஜபுரம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் 27 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக கடந்த 2005- 2006-ம் ஆண்டு ரூ.69 லட்சம் செலவில் அருவியில் வரும் நீரை தடுப்பணையில் தேக்கி, அங்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்பட்டது. பின்னர் தொட்டியில் இருந்து ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் அருவியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இருப்பினும் குமணன்தொழு, மண்ணூத்து உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. சில கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதே இல்லை.

காரணம் அருவி பகுதியில் இருந்து வரும் பிரதான குழாயில் சிலர் முறைகேடாக இணைப்புகள் செய்து நீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கிராமங்களுக்கு போதுமான குடிநீர் செல்வதில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் கிராமங்களுக்கு போதுமான குடிநீர் செல்லாததற்கு, மற்றொரு காரணமும் உள்ளது. அருவியின் தடுப்பணை பகுதியில் இருந்து நீர் எடுத்து வரும் 2 பிரதான குழாய்கள் குறிப்பிட்ட தொலைவுக்கு பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு மற்றொரு குழாய் வழியாக 450 மீட்டர் தொலைவில் உள்ள நீர்தேக்க தொட்டிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

அருவியில் இருந்து வரும் 2 பிரதான குழாய்களை விட நீர்தேக்க தொட்டிக்கு எடுத்து செல்லப்படும் குழாய் அளவில் சிறியதாக உள்ளது. எனவே பிரதான குழாய்களில் வரும் நீர் அளவு சிறிய அளவிலான குழாய் வழியாக செல்ல முடியவில்லை. எனவே அதிக அழுத்தம் காரணமாக பிரதான குழாய்களில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக குடிநீர் வீணாகிறது. இதனை ஊராட்சி பணியாளர்கள் அவ்வப்போது சீரமைத்தாலும், சில நாட்களிலேயே அந்த இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு நீர் கசிவு ஏற்படுகிறது.

இதனால் குறைந்த அளவு தண்ணீரே நீர்த்தேக்க தொட்டியை வந்து அடைகிறது. இந்த காரணத்தினால் கிராமங்களுக்கு போதுமான நீர் செல்வதில்லை. போதிய நிதி ஒதுக்கீடு செய்து பெரிய அளவிலான குழாயை அமைத்து கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அருவியில் இருந்து எடுக்கப்படும் நீர் முழுமையாக நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் வகையில் புதிய குழாய் அமைக்கவேண்டும். மேலும் பிரதான குழாயில் முறைகேடாக நீர் எடுக்கப்படுவதை தடுத்து கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story