மாவட்ட செய்திகள்

போலீஸ் உடல்தகுதி தேர்வில் பங்கேற்க திருநங்கைக்கு அடையாள அட்டை + "||" + Take part in the Police Physical Qualification Examination Identity card for transgender

போலீஸ் உடல்தகுதி தேர்வில் பங்கேற்க திருநங்கைக்கு அடையாள அட்டை

போலீஸ் உடல்தகுதி தேர்வில் பங்கேற்க திருநங்கைக்கு அடையாள அட்டை
போலீஸ் உடல்தகுதி தேர்வில் பங்கேற்க திருநங்கைக்கு நலவாரிய அடையாள அட்டையை கலெக்டர் நடராஜன் உடனடியாக வழங்கினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்த நஸ்ரியா(வயது 21) என்ற திருநங்கை நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:– திருநங்கையான நான் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற காவலர் பணிக்காக எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்வு பெற்றேன். இதனை தொடர்ந்து நடைபெற்ற உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ள ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் சென்றபோது அங்கிருந்த அதிகாரிகள் திருநங்கைக்கான சான்றிதழ் இல்லை என்று கூறி என்னை தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. இதன்பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து திருநங்கை சான்றிதழ் பெற்றேன்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற உடல்தகுதி தேர்விற்கு சென்றபோதும் முதல்கட்ட தேர்விலேயே தகுதி பெறாததால் இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி என்னை தேர்வில் கலந்து கொள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அனைத்து சான்றிதழ்களுடன் சென்றபோதும் மூன்றாம் பாலின பிரிவிற்கான இட ஒதுக்கீட்டில் என்னை தேர்விற்கு அனுமதிக்கவில்லை.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பில் நலவாரிய அடையாள அட்டை இருந்தால் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு நலவாரிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை 22–ந்தேதி (இன்று) சமர்ப்பிக்க உத்தரவிட்டுஉள்ளது.

கோர்ட்டு உத்தரவின்படி நான் நலவாரிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் 23–ந்தேதி (நாளை) எனக்கு தகுதி தேர்வு நடத்த அரசு அனுமதி அளிக்கும். இந்த தேர்வில் கலந்துகொள்வதற்காக திருநங்கை நலவாரிய அடையாள அட்டை தேவைப்படுகிறது. உடனடியாக எனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கூறினார்.

இதுதொடர்பாக திருநங்கை நஸ்ரியா கலெக்டர் நடராஜனை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை கேட்ட கலெக்டர் இதுகுறித்து உடனடியாக விசாரித்து அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டு உடனடியாக அடையாள அட்டை வழங்கினார்.