கலெக்டர் அலுவலகத்துக்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி மனு கொடுத்தனர்


கலெக்டர் அலுவலகத்துக்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 8:24 PM GMT)

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் உள்பட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார், பள்ளி முதல்வர் உள்பட ஏராளமானவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், துரைசாமிபுரம் பகுதியில் உள்ள டாஸ்டாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 24–ந் தேதி நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், டாஸ்மாக் கடையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி டாஸ்டாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் அதன் மாநில பொதுச்செயலாளர் அரிஹருண் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், கோர்ட்டு அருகில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் சிலையை சுற்றி தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிவிட்டன. சிலை அருகே குப்பைகளை கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துகிறார்கள். மேலும் மின் விளக்கு போடப்படாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் சிலை அருகே நடக்கின்றன. எனவே இவற்றை எல்லாம் தடுக்க சிலையை சுற்றி பசுமை பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 30 பேர் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் தியாகராஜன் தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.375 வீதம் பிரீமியம் கட்டி உள்ளோம். ஆனால் பணம் கட்டிய சுமார் 1,200 பேருக்கு இதுவரை காப்பீடு தொகை வந்து சேரவில்லை. காப்பீடு தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

அறிவொளி, வளர் கல்வி திட்டத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் கற்கும் பாரதம் திட்டத்தில் பணி வழங்கவேண்டும் என்று கோரி ஜீவா நகரை சேர்ந்த சாந்தி தலைமையில் வந்த பெண்கள் மனு கொடுத்தனர். மேலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.


Next Story