டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-22T02:47:11+05:30)

காரப்பட்டு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி,

ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

காரப்பட்டு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்ற தகவல் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. காரப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காரப்பட்டு, கதவணி, கருமாண்டபதி, கீழ்மத்தூர், உப்பாரப்பட்டி, ராமகிருஷ்ணம்பதி, பாப்பாரப்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1,300 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இப்பள்ளி தொடர்ந்து 98 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று, மாவட்டத்தின் முதன்மை பள்ளியாக விளங்கி வருகிறது. அதே போல் இங்குள்ள வங்கிக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அத்துடன் துணை சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, மின்சார வாரிய அலுவலகத்திற்கும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பெரியார் நகர் குடியிருப்பில் குடியிருக்கும் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காரப்பட்டு வழியாக தான் நடந்து செல்கின்றனர். அத்துடன் நல்லாகவுண்டனூர், புல்லவேடம்பதி, காந்தி நகர், அறியானூர், காவேரிக்கொட்டாய், மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களும் இங்கு தான் வருகின்றனர்.

இது போன்ற நிலையில், தற்போது காரப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என தெரிகிறது. அவ்வாறு டாஸ்மாக் கடை திறந்தால் பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்கு வருபவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என பெரும்பாலானோர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். அத்துடன் விபத்துகளும் அதிக அளவில் ஏற்படும். எனவே, காரப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story