தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-22T02:49:42+05:30)

தர்மபுரி மாவட்ட ஏரிகளில் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் தர்மபுரி நகரில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடும் விழா தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் பள்ளி அருகே நடைபெற்றது. விழாவிற்கு இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சாந்தமூர்த்தி வரவேற்று பேசினார். தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில் முன்னாள் எம்.பி. பாரிமோகன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, பா.ம.க. மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், அரசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பாட்டாளி இளைஞர் சங்க தலைவரும் தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தர்மபுரி நகர பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் வீட்டுக்கொரு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார். பின்னர் தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் தான் அதிக அளவில் வனப்பகுதி உள்ளது. இந்த மாவட்டத்தில் 40 சதவீதம் வனப்பகுதியாகும். இந்த பகுதியின் சுற்றுச்சூழலையும் நீராதாரங்களையும் பாதுகாக்க வேண்டும். இதற்காக பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. பசுமைதாயகம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் 100 ஏரிகளை தூர்வாரி உள்ளோம். இந்த மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் 1 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளோம்.

பொதுமக்களின் நலன்களை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பது பா.ம.க.தான். தற்போது மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதை பார்த்து எனது இனிய நண்பர் மு.க.ஸ்டாலினும் நாளை முதல் மரக்கன்றுகளை நடத்தொடங்கி விடுவார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை கனமழையால் நிரம்பி வருகிறது. இதனால் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறும் தென்பெண்ணையாற்று தண்ணீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஓரிரு நாளில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் நம்பிராஜன், மாவட்ட துணைசெயலாளர்கள் பாலகிருஷ்ணன், டி.ஜி.மணி, பசுமைத்தாயகம் மாவட்ட அமைப்பாளர் மாது மற்றும் கட்சி நிர்வாகிகள், இளைஞர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் யாரிடமாவது கேட்டாரா? சட்டமன்றத்தில் விவாதித்தாரா? அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டாரா? இந்த பிரச்சினையில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அடிபணிந்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து உள்ளது. தற்போது அ.தி.மு.க.வின் 2 அணிகள் இணைவதால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story