ரசாயன கலவை பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது


ரசாயன கலவை பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது
x
தினத்தந்தி 21 Aug 2017 11:13 PM GMT (Updated: 21 Aug 2017 11:13 PM GMT)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரசாயன கலவை பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

திருவள்ளூர்,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25–ந்தேதி(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:–

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பவர்கள் அது தொடர்பாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலைகளை அமைக்கும் போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத இடங்களை தேர்வு செய்து வைக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட உயரத்துக்கு மிகாமல், களி மண்ணால் ஆன சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். நீரினால் கரையக்கூடிய இயற்கை வண்ணப்பூச்சுகளை பயன்படுத்திய சிலைகள் மட்டுமே வைக்கவேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், மண்எண்ணெய் போன்ற பொருட்களை சிலைகளின் அருகே வைக்கக்கூடாது.

சிலைகள் அமைக்கும் இடங்களில் தீயணைப்பு கருவிகள் அமைத்து விழா முடியும் வரை சிலைகள் அருகிலேயே வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். சிலை அமைப்பாளர்கள் சிலை அருகே எப்போதும் 2 நபர்கள் விழிப்புடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

ரசாயன கலவை பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது. ஒலிப்பெருக்கியை விழா நடைபெறும் நாளன்று ஒரு நாள் தவிர மற்ற நாட்களில் பயன்படுத்தக்கூடாது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களின் அருகில் சிலைகளை அமைத்தால் கண்டிப்பாக ஒலிப்பெருக்கியை பயன்படுத்தக்கூடாது.

மின்சார கம்பிகள் செல்லும் பாதைகளின் கீழ் சிலைகளை அமைக்கக்கூடாது. போலீசார் அனுமதி இன்றி கண்டிப்பாக சிலை கரைப்பு ஊர்வலம் செல்லக்கூடாது. ஊர்வலத்துக்கு அனுமதிக்கப்பட்ட பாதையை விடுத்து மாற்று பாதையில் செல்லக்கூடாது.

மசூதி, தேவாலயம் ஆகியவற்றை கடக்கும் போது அவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் செல்ல வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலச்சந்தர், புகழேந்தி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரைப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிலை அமைப்பாளர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விநாயகர் சிலைகள் 3 அல்லது 5 நாட்களுக்குள் அருகே உள்ள நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளை கரைக்கும் போது பெரியவர்களும் உடன் இருக்க வேண்டும் என்பது உள்பட சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலான பல்வேறு கருத்துகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், சிலை அமைப்பாளர்களிடம் வலியுறுத்தினார்.

இதில் ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், மகாலிங்கம், நாராயணமூர்த்தி, புகழேந்தி, மாதவன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், திருக்கழுக்குன்றம், சுங்குவார்சத்திரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், வண்டலூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீஸ் சார்பில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 3–ந்தேதி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாமல்லபுரத்தில் சிலை அமைப்பாளர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து சிலை கரைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை போலீசார் நடத்தினர்.

கூட்டத்தின் முடிவில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் கூறும்போது, ‘‘‘பிளாஸ்டர்பேரிஸ்’ எனப்படும் வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி கொண்டுவரப்படும் சிலைகள் பறிமுதல் செய்யப்படும். களி மண்ணால் செய்யப்படும் சிலைகளை மட்டுமே மாமல்லபுரம் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்படும். வரையறுக்கப்பட்ட தெருக்கள் வழியாக மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படும். மது அருந்திவிட்டு வரும் நபர்கள் கடலில் சிலை கரைக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்’’ என்றார்.

இது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் சிலை அமைப்பாளர்களிடம் போலீசார் வழங்கினர். இதில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், அனுமந்தன், சப்–இன்ஸ்பெக்டர் கமலதியாகராஜன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.



Next Story