சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மனு


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மனு
x
தினத்தந்தி 21 Aug 2017 11:33 PM GMT (Updated: 21 Aug 2017 11:33 PM GMT)

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் மனு கொடுத்தனர்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 210 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை கலெக்டர் சம்பத், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி தீர்வுகாண உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் மனுக்களை பெற்றார்.

ஓமலூர் அருகே தும்பிப்பாடியில் உள்ள மாமரத்தூர் காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு தொடர்ந்து குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் ஒரு குடம் தண்ணீர் எடுக்க 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியுள்ளது. மேலும் சாலை வசதி இல்லாததால் தடுமாறி விழுந்து காயப்படுவதோடு, எடுத்து வரும் தண்ணீரும் கீழே கொட்டி விடுகிறது. குடிநீர் வசதி இல்லாததால் கேன் தண்ணீருக்கு மாதம் ரூ.1,500 வரை செலவிட வேண்டியுள்ளது. இதனால் குடும்ப பொருளாதார நிலையும் சீரழிகிறது. சில குடும்பங்கள் குடிநீர் பிரச்சினை காரணமாக ஊரைவிட்டே சென்று விட்டனர்.

ஏற்கனவே அரசு மூலம் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் நீரோட்டம் உள்ள இடத்தில் இருந்து தள்ளி ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டதால் இம்முயற்சி வெற்றியடையவில்லை. மேலும் இப்பகுதியில் ஏற்கனவே நீர்த்தேக்கத்தொட்டியும் கட்டப்பட்டு உள்ளது. எனவே நீர் தேக்கத்தொட்டி மின்மோட்டார் பைப்புகள், மின் இணைப்பு கம்பிகள் என அனைத்தும் உள்ள நிலையில் மீண்டும் நீரோட்டம் பார்த்து பொருத்தமான இடத்தில் ஒரு ஆழ்குழாய் கிணறு தோண்டப்படுவதே குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு போதுமானதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வாழப்பாடி காசிவிஸ்வநாதர் கோவில் திருப்பணிக்கமிட்டியை சேர்ந்த கமல்ராஜ் கொடுத்துள்ள மனுவில், காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான சமுதாய கூடம் உள்ளது. இங்கு பல்வேறு வகையான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் கழிப்பிட வசதி, குடி தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே சமுதாய கூடத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.ஓமலூர் அருகே உள்ள மூங்கத்தூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதிக்கு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பகுதி நேர ரே‌ஷன் கடை செயல்பட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்தும் கடை அமைக்காத சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

Next Story