அரசு ஊழியர்– ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: அலுவலகங்கள் வெறிச்சோடின


அரசு ஊழியர்– ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: அலுவலகங்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 22 Aug 2017 6:49 PM GMT)

மதுரையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நேற்று அலுவலகங்கள் வெறிச்சோடின. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மதுரை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ– ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். அதன்படி மதுரை மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெரும்பான்மையானவர்கள் விடுமுறை எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்– ஆசிரியர்கள் 80 சதவீதத்திற்கும் மேல் நேற்று பணிக்கு வர வில்லை.

அதனால் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் வெறிச்சோடி காட்சியளித்தன. மதுரை வடக்கு, தெற்கு தாலுகா அலுவலகங்கள் மூடிக்கிடந்தன. மற்ற தாலுகா அலுவலகங்களும் செயல்படவில்லை. எனவே வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. வருமானம், சாதி சான்றிதழ்கள் போன்றவைகளை பொதுமக்கள் வாங்க இயலவில்லை. அதனால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையத்தில் வழக்கத்திற்கு அதிகமாக பொதுமக்கள்கூட்டம் இருந்தது.

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல் திறந்திருந்தன. வழக்கத்தை விட மாணவ– மாணவிகளின் வருகை எண்ணிக்கை குறைவாக இருந்தது. தலைமை ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் அவர்களை கவனித்து கொண்டார்கள். வேலைநிறுத்தம் செய்த அரசுஊழியர்கள், ஆயிரக்கணக்கானோர் நேற்று காலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடினார்கள்.

அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரன், முருகன், சுப்பையன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன், வருவாய் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் முருகையன், பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் சுரேஷ் உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.


Next Story