"ஹேர்கட்" என்ற பெயரில் வாராக்கடன் தள்ளுபடி: வாடிக்கையாளர்களிடம் அபராதம் போல் சேவைக்கட்டணம் வசூலிப்பதா? வங்கி ஊழியர்கள் சங்கம் கேள்வி


ஹேர்கட் என்ற பெயரில் வாராக்கடன் தள்ளுபடி: வாடிக்கையாளர்களிடம் அபராதம் போல் சேவைக்கட்டணம் வசூலிப்பதா? வங்கி ஊழியர்கள் சங்கம் கேள்வி
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-23T00:19:51+05:30)

“ஹேர்கட்“ என்ற பெயரில் தனியார் நிறுவனங்களின் வாராக்கடன் ரூ.59 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துவிட்டு, வாடிக்கையாளர்களிடம் அபராதம் போல் சேவைக்கட்டணம் வசூலிப்பதா என்று வங்கி ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை,

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது. வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும். சேவைக் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர், பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

மதுரை நகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். அதனால் வங்கிகள் செயல்படவில்லை. சில வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. வேலை நிறுத்தத்தால் வங்கிகளின் அன்றாட பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. பணப் பரிவர்த்தனைகள் முடங்கின. வேலை நிறுத்தத்துடன் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

மதுரை வடக்குவெளிவீதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பாக நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் அமைப்பாளர் சுந்தரராஜன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டம் குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத்தலைவர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:–

அரசு வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது, பல்வேறு வங்கிகளை ஒரே வங்கியின் கீழ் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வாராக்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது. சொத்துக்கள் இருந்தும் வேண்டுமென்றே கடனை திருப்ப செலுத்தாமல் இழுத்தடிக்கும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக பாராளுமன்றக்குழு அளித்த பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். வங்கிகள் வாரிய அமைப்பை நீக்க வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கான வாராக்கடன் தள்ளுபடிகளை ஈடுசெய்ய சாதாரண வாடிக்கையாளர்களிடம் கூடுதல் சேவைக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. ஜி.எஸ்.டி. பெயரால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது வங்கி ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில், அனைத்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

அதன்படி, மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள 800க்கும் மேற்பட்ட வங்கிகளின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் 65 பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர்களும் அடங்குவர்.

மத்திய அரசு கடந்த 2016–17 நிதியாண்டில் மட்டும் “ஹேர்கட்“ என்ற பெயரில் தனியார் நிறுவனங்களின் வாராக்கடன் தொகை ரூ.59 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. அதனை ஈடுகட்ட ஸ்டேட் வங்கிகளில் சேவைக்கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் போல் சேவைக்கட்டணம் என்ற பெயரில் ரூ.232 கோடி வரை வருமானமாக பெற்றுள்ளது.

மத்திய பா.ஜ.க.அரசின் தனியார்மயம், வராக்கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் சரிவை உண்டு பண்ணும் என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story