ஆசிரியர், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 8,404 பேர் பணிக்கு செல்லவில்லை


ஆசிரியர், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 8,404 பேர் பணிக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 7:06 PM GMT)

மாவட்டம் முழுவதும் ஆசிரியர், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 8,404 பேர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்,

கடந்த 2013–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சி.பி.எஸ். என்னும் புதிய ஓய்வூதிய திட்டத்தால் பலனில்லை என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ என்னும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஜியோ என்னும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கணிசமாக பங்கேற்றனர். மொத்தம் 8 ஆயிரத்து 404 பேர் பணிக்கு செல்லவில்லை.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தாலுகாக்களிலும் ஆர்ப்பாட்டமும் நடந்தது. திண்டுக்கல் கிழக்கு, மேற்கு தாலுகா அலுவலகங்கள் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஜாக்டோ வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணதாஸ், கார்த்திகேயன், ஜியோ வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் வின்சென்ட்பால்ராஜ், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் சுகந்தி, ஜாக்டோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்பீட்டர், சந்திரசேகரன், ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முபாரக்அலி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ, ஜியோ வட்ட கிளை நிர்வாகிகள் சீனிவாசன், சுந்தரபாண்டி, வசந்தகுமார் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் 500–க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, வேடசந்தூரில் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஆகிய மூன்று ஒன்றியங்களில் இருந்து ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பச்சைமுத்து, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

கொடைக்கானலில் மூஞ்சிக்கல் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடின. குறிப்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லாததால், கலெக்டர் அலுவலகம் வழக்கமான பரபரப்பு இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சி, மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல், குடிநீர் கட்டணத்தை வசூலிப்பது போன்ற பணிகள் முடங்கியதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

மேலும், ஆசிரிய, ஆசிரியைகள் பணிக்கு செல்லாததால், மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க பி.எட். பயிற்சி ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதனால் பல இடங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. குறிப்பாக, மாவட்டம் முழுவதும் 1,066 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பூட்டப்பட்டு இருந்தன.

ஏனென்றால் இந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இவர்கள் நேற்று முன்தினமே மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கப்படாது என்ற விவரத்தை தெரிவித்து இருந்தனர். இதனால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. சில இடங்களில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் பார்க்க முடிந்தது.

ஜாக்டோ, ஜியோ நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 550 பேரும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 4 ஆயிரத்து 25 பேரும் கலந்துகொண்டனர். இதே போல, வருவாய்த்துறையில் 493 பேர், ஊரக வளர்ச்சி முகமையில் 580 பேர், நெடுஞ்சாலைத்துறையில் 111 பேர், பேரூராட்சிகளில் 70 பேர், திண்டுக்கல் மாநகராட்சியில் 75 பேர் உள்பட அரசு ஊழியர்கள் 1,829 பேரும் பணிக்கு செல்லவில்லை. மொத்தத்தில், 19 ஆயிரத்து 53 பேரில் 8 ஆயிரத்து 404 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். 10 ஆயிரத்து 253 பேர் பணியில் இருந்தனர். மீதமுள்ளவர்கள் விடுப்பில் சென்றிருந்தனர். அதாவது, வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 44 சதவீதம் பேர் பங்கேற்றனர்.


Next Story