7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம்


7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-23T01:16:58+05:30)

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்தக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்,

பொதுமக்களை பாதிக்கும் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிடுதல், வங்கிகள் இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும், கார்ப்பரேட் கடன்களை முழுவதுமாக வசூல் செய்ய வேண்டும். மேலும் பெரும் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யக்கூடாது. கடன் தள்ளுபடி காரணமாக வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை, வங்கி சேவை கட்டணம் என்கிற பெயரில் வங்கியின் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடாது என்று 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22–ந்தேதி (அதாவது நேற்று) அகில இந்திய அளவில் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 160–க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள், அதிகாரிகள் என 1,400–க்கும் மேற்பட்டோர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். வங்கி மேலாளர், காசாளர் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகளே பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அந்தந்த வங்கிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் ரூ.200 கோடி அளவில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும் ஏ.டி.எம். சேவையும் முடங்கின. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் காசோலை மற்றும் பண பரிமாற்றம் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.

வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விழுப்புரம் இந்தியன் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க முன்னாள் தலைவர் முருகன் சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி சுந்தரவரதன், ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சீனிவாசன், நீலகண்டன், ஜோசப், மத்திய கூட்டுறவு வங்கி சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், காமராஜ், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் சேகர், ஜெயச்சந்திரன், மணிராதா, நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் வங்கி ஊழியர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

இதேபோல் கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி முன்பு தாலுகா வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மேற்கண்டன கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார். இதில் பழனி, மகேஷ், சுப்பிரமணி, விஸ்வநாதன் மற்றும் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story