புதுவையில் கேரளாவை சேர்ந்த கஞ்சா கும்பல் தலைவன் கைது


புதுவையில் கேரளாவை சேர்ந்த கஞ்சா கும்பல் தலைவன் கைது
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 22 Aug 2017 8:08 PM GMT)

புதுவையில் கேரளாவை சேர்ந்த கஞ்சா கும்பல் தலைவனை போலீசார் கைது செய்தனர். இதுவரை மொத்தம் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்வதாகவும், இதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின் பேரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்துகண்ணு சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த தர்மாபுரி பகுதியை சேர்ந்த பாபு, அஜித் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் மேட்டுப்பாளையம் தர்மாபுரியை சேர்ந்த நடராஜன் என்ற கட்டெரும்பு நடராஜன்(வயது 34) மூலம் கஞ்சா விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கட்டெரும்பு நடராஜனை கைது செய்து அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கேரளாவை சேர்ந்த முகமது பைசல்(38) என்பவர் அங்கிருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கட்டெரும்பு நடராஜனை செல்போனில் பேச வைத்து முகமது பைசலை விழுப்புரம் வரவழைத்தனர்.

இதனை தொடர்ந்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முகமது பைசல் ரெயிலில் வந்து இறங்கினார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முகமது பைசலை கைது செய்து அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் புதுவைக்கு கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் தலைவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீசார் இதுவரை 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா கும்பலை படித்த போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story