பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நீலகிரியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நீலகிரியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 8:41 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த கோரி நேற்று நீலகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் முடங்கின.

ஊட்டி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் (ஜாக்டோ–ஜியோ) கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நீலகிரி மாவட்ட ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. இதற்கு ஜியோ மாவட்ட தலைவர் ஆனந்தன், ஜாக்டோ மாவட்ட செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் தலைமை தாங்கினர். குமாரராஜா, சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் 500–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பப்பட்டது. பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஜியோ மாவட்ட தலைவர் ஆனந்தன் கூறியதாவது:–

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை கடந்த 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தினால், அடுத்த மாதம் (செப்டம்பர்) மாதம் 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 3 ஆயிரத்து 500 அரசு ஊழியர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 500 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் குன்னூர், கூடலூர், கோத்தகிரி தாலுகாவிலும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பூட்டு போட்டு மூடப்பட்டு இருந்தது. மேலும் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அலுவலக பணிகள் முடங்கின. வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தது. மேலும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவ– மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட வில்லை. இதனால் மாணவ– மாணவிகள் பள்ளிக்கூட வளாகத்தில் விளையாடி கொண்டிருந்தனர். மேலும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பள்ளிக்கூடத்துக்கு மாணவ– மாணவிகளின் வருகையும் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

இதனிடையே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அன்பழகன், முருகேசன், சலீம் ஆகியோர் தலைமை தாங்கினர். வருவாய் துறை அலுவலர் சங்க ஜான்மனோகர் ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செந்தில்குமாரி, தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நலச்சங்க சேகர், கிராம சுகாதார செவிலியர் சங்க மாவட்ட தலைவர் பரமேசுவரி, அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் அருண்குமார், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக ஆனந்திகுமாரி, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் நாகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவ– மாணவிகளின் வருகைகயும் குறைவாக இருந்தது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் குறித்து தெரியாத பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து இருந்தனர். ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று தெரிந்தும் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக தொடக்கப்பள்ளிகளில் மாணவ– மாணவிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

மாவட்டம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மொத்தம் 1833 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் 1592 பேர் நேற்று பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1326 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் நேற்று 1121 பேர் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக பணிக்கு வந்து இருந்த ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் மாணவ– மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்பட்டது.


Next Story