டேன்டீயில் மரங்கள் வெட்ட அனுமதி: கூடலூரில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


டேன்டீயில் மரங்கள் வெட்ட அனுமதி: கூடலூரில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 22 Aug 2017 8:41 PM GMT)

டேன்டீயில் மரங்கள் வெட்ட அனுமதி வழங்கியதை கண்டித்து கூடலூரில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நடுவட்டம் பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் பல ஆண்டுகளாக வளர்ந்து முற்றிபோன சில்வர் ஓக் மரங்களை வெட்ட வருவாய், வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கு தொழிற்சங்கங்கள், தி.மு.க., காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டேன்டீ சார்பில் வங்கியில் பெற்றுள்ள கடன்களை ஈடு செய்வதற்காக மரங்களை வெட்டுவதாக டேன்டீ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் டேன்டீயில் சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளதை கண்டித்து கூடலூர் காந்தி திடலில் நேற்று மாலை 4 மணிக்கு தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மனித நேய மக்கள் கட்சி உள்பட அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு தேயிலை தோட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட அனுமதி அளித்துள்ளதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு செயலாளர் கா.ராமச்சந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கணேசன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பத்ரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெள்ளி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் கே.பி.முகமது, விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் சகாதேவன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல்சமது, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகி பாண்டியராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷிபேபி, ஷாஜி, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வாசு, பாலகிரு‌ஷண்ன், குஞ்சுமுகமது, முகமது கனி உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story