ஆழியாற்றில் இருந்து முதல் போக நெல்சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்


ஆழியாற்றில் இருந்து முதல் போக நெல்சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-23T02:22:25+05:30)

ஆழியாற்றில் இருந்து முதல் போக நெல்சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் முறையீட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தில் பழைய ஆயக்கட்டு பகுதியில் 2 போகம்பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால் நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. இதனால் நெல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 11–ந் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு உயிர் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த உயிர் தண்ணீர் 15 நாட்கள் மட்டுமே விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தண்ணீர் நீண்ட கால பயிரான தென்னைகளுக்கு பாய்ச்சப்பட்டது. மற்றும் நெல் சாகுபடிக்கான நாற்று தயாரிக்க உபயோகிக்கப்பட்டது. தற்போது அப்பர் ஆழியாறு, காடம்பாறை நீர்மின்தேக்கத்தில் 1.6 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. ஒப்பந்தப்படி ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் விடும் போதெல்லாம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

ஆகவே முதல் போக நெல் சாகுபடிக்கு தொடர்ந்துஆழியாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசுக்கு பரிந்துதுரை செய்ய வேண்டும். காளியாபுரத்திலிருந்து குளப்பத்து குளத்திற்கு வண்டல் மண் எடுக்கச் செல்லும் வழியை தனியார் அடைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். திப்பம்பட்டியில் உள்ள இளநீர் வணிக வளாகத்தில் விவசாய சம்பந்தப் பட்ட பிற பணிகளுக்கும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதியில் கடும் வறட்சி காரணமாக தோட்டங்களில் ஆழ்குழாயிலிருந்து தண்ணீர் எடுத்து கிணற்றிற்கு விட்டு தண்ணீர் பாய்ச்சும் போது தண்ணீர் வீணாகின்றன. அதனால் தண்ணீர் வீணாவதை குறைக்க சிமெண்டால் ஆன தொட்டி அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

இதனை தொடர்ந்து கூட்டதில் சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–

பி.ஏ.பி பாசனத் திட்டத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆழியார் அணையில் குறைந்த அளவில் உள்ள நீர் குடிநீர் தேவைக்காக மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பருவ மழை போதிய அளவு பெய்யும் என்று முடிவு செய்ய முடியாது. விவசாயத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்று தான் இந்த கூட்டம் வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். கேரளாவிற்கு குடி நீருக்காக மட்டும் தான் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுவும் ஒப்பந்தத்தை விட குறைவுதான். இங்குள்ள பொதுப்பணித் துறை பொறியாளர் மட்டும் வாக்குறுதி கொடுக்க முடியாது. ஆகவே விவசாயிகளின் ஒத்துழைக்க வேண்டும். தண்ணீர் திறந்து விடுவது குறித்து அரசுக்கு கண்டிப்பாகத் தெரியப்படுத்தப்படும்.

மேலும் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சப்–கலெக்டர் அலுவலகத்திற்கு மட்டும் பதில் அளித்தால் போதாது. சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கும் பதில் அனுப்பி வைக்க வேண்டும். ஆனைமலை ஆழியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அரசுக்கு முன் மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்னை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story