மும்பையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை களைகட்டியது


மும்பையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை களைகட்டியது
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 22 Aug 2017 9:48 PM GMT)

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை களைகட்டி உள்ளது. பொதுமக்கள் ஆர்வமாக பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

மும்பை,

விநாயகர் சதுர்த்தி நாட்டிலேயே மும்பையில் தான் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்றால் மிகையாகாது. விநாயகர் சதுர்த்தி தொடங்கி சிலை கரைக்கப்படும் ஆனந்த சதுர்த்தி வரை 11 நாட்களும் மும்பை நகரமே உற்சாக கொண்டாட்டத்தில் மிதக்கும். மக்கள் மும்பை முழுவதும் உள்ள பிரபலமான மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகரை தரிசிப்பார்கள்.

குறிப்பாக மும்பை லால்பாக் ராஜா, கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி., செம்பூர் சையாத்ரி விநாயகரை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வார்கள். இதேபோல எல்லா வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள்.

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் நேற்று மும்பையில் விநாயகர் சதுர்த்தி வியாபாரம் களைகட்டியது. தாதர், மஜித்பந்தர், லால்பாக், மலாடு, அந்தேரி, செம்பூர் மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் வீட்டு அலங்கார பொருட்கள், சிறியஅளவிலான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய வைக்கப்படும் தெர்மோகோல் மேடைகள், முத்து மாலைகள், பட்டுத்துணி, பிளாஸ்டிக் தோரணங்கள் போன்ற பொருட்களை ஆர்வமாக வாங்கிச்சென்றனர்.

இதேபோல விநாயகருக்கு பிடித்த கொழுகட்டை (மோதி) வடிவிலான லட்டு, பொறி, கடலை, அவல் போன்றவற்றின் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. பூஜை பொருள் விற்பனையாளர்கள், கடைகளில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து தாதர் பகுதி வியாபாரி ஒருவர் கூறுகையில், முத்துமாலை ரூ.60–யில் தொடங்கி ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்கள், எலி வடிவ சிலைகள், விநாயகர் கிரீடம் போன்றவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

தெர்மாகோல் மேடைகள் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. வேலைப்பாடுகளை பொறுத்து விலையில் மாற்றங்கள் இருந்தன.

லால்பாக் பகுதியில் பொருட்கள் வாங்கிய பெண் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டைவிட தற்போது பல புதிய மாடல்களில் அலங்கார பொருட்கள் வந்துள்ளன. எனினும் எல்லா பொருட்களும் கடந்த ஆண்டைவிட விலை அதிகமாக உள்ளது’’ என்றார்.


Next Story