வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 22 Aug 2017 9:58 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்று சுமார் ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் கூறினர்.

நாமக்கல்,

வங்கி சீர்திருத்தங்களை தடுத்து நிறுத்த வேண்டும், பொதுத்துறை வங்கிகளின் இணைப்பை கைவிட வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்யாமல் வசூலிக்க வேண்டும், வங்கித்துறையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, விவசாய கடன்களை வசூலிக்க தனியாருக்கு அதிகாரம் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 160 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் நேற்று மூடப்பட்டு இருந்தன.

ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு

இவற்றில் அதிகாரிகள் மட்டத்தில் பணியாற்றி வரும் 356 பேரும், ஊழியர்களாக பணியாற்றி வரும் 857 பேரும் நேற்று பணிக்கு வரவில்லை. இதேபோல் தனியார் வங்கிகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சிலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் வங்கிகளில் வழக்கமாக நடைபெறும் காசோலை மாற்றம் உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பணபரிவர்த்தனையும் கோடிக்கணக்கில் முடங்கியது. இது குறித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் கூறியதாவது :- நாமக்கல் மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்று உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் தினசரி நடைபெறும் சுமார் ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story