வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 9:59 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திருச்சி,

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது. வாராக்கடன்கள் வசூலிப்பதை துரிதப்படுத்த வேண்டும். வாராக்கடன் கட்டாதவர்களை கிரிமினல் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சேமிப்புக்கணக்கு வட்டியை உயர்த்த வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 250 வங்கி கிளைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமலும், பணம் செலுத்த முடியாமலும் சிரமம் அடைந்தனர். ஏ.டி.எம். மையங்களில் சேவை பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஜென்னிபிளாசா வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராமராஜூ தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன், வங்கி ஊழியர் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் வெங்கட சுப்பிர மணியன் மற்றும் தலைவர் ராமமூர்த்தி உள்பட வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள். வேலை நிறுத்த போராட்டம் குறித்து பொதுச்செயலாளர் ராமராஜூ கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் 250 வங்கி கிளைகள் உள்ளன. அதில் பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது” என்றார். 

Next Story