மதிப்பெண் குறைவாக எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் துப்பாக்கியால் சுட்டு மாணவர் தற்கொலை


மதிப்பெண் குறைவாக எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் துப்பாக்கியால் சுட்டு மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2017 11:30 PM GMT (Updated: 2017-08-23T03:30:23+05:30)

மணப்பாறை அருகே மதிப்பெண் குறைவாக எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் துப்பாக்கியால் சுட்டு பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றிய பகுதியில் உள்ள பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சவரிமுத்து. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர் திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி டெய்சிராணி. இவர் பாலக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு கெவின் மார்க்(வயது 15) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். கெவின் மார்க் கைகாட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். சவரிமுத்து அனுமதி பெற்று வீட்டில் துப்பாக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் ஒலியமங்கலத்தில் உள்ள டெய்சிராணியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்ப்பதற்காக நேற்று கெவின் மார்க்கின் பெற்றோர் மற்றும் சகோதரி சென்றுவிட்டனர். பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி வந்த கெவின் வீட்டில் தனியாக இருந்தார்.

இரவு 7.30 மணி அளவில் அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அப்போது கெவின்மார்க் வீட்டில் இருந்து துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அப்போது கெவின் மார்க் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அலறியடித்துக்கொண்டு வந்த அவர்கள் மகனின் உடலை கண்டு கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர் மற்றும் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கெவின் மார்க்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கியையும் அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கெவின் மார்க் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றுள்ளார். இதையறிந்த அவருடைய பெற்றோர், அவரை கண்டித்து நன்றாக படிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது, தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story