வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் 260 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் 260 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 10:00 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் வேலை நிறுத்த போராட்டத்தினால் 260 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

வேலை நிறுத்தம் போராட்டத்தையொட்டி திருவண்ணாமலை காந்தி சிலை அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

அப்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. வராக்கடனை வேண்டுமென்றே செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் கடன் வழங்கும் கொள்கையில் மாற்றம் செய்து சிறு விவசாயிகள், தொழில் முனைவோர், பெண்கள், மாணவர்கள், வியாபாரிகள் போன்றவர்களுக்கு அதிகம் கடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் என 9 சங்கங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 260 வங்கிகளை சேர்ந்த 1,700 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருநாளில் 260 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கண்ணமங்கலத்தில் உள்ள இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு பணியாளர்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 

Related Tags :
Next Story