டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-23T03:31:44+05:30)

மன்னார்குடியில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மன்னார்குடி,

மன்னார்குடி அசேசம் சஞ்சீவி நகரை சேர்ந்தவர் லக்குமணன் (வயது 47). இவர் மன்னார்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தானில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு கடையில் வசூல் ஆன ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 180-ஐ ஒரு பையில் வைத்து கொண்டு மன்னார் குடிக்கு பஸ்சில் வந்துள்ளார். பின்னர் மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகில் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.

அவரை 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். அப்போது ஒருவர் முகவரி கேட்பது போல் லக்குமணனின் அருகில் வந்தார். மற்றொருவர் அவரை அரிவாளால் வெட்டினார். பின்னர் அவர்கள் 2 பேரும் பணம் வைத்திருந்த பையை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

வலைவீச்சு

அப்போது லக்குமணன் சத்தம் போட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த லக்குமணன், மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து லக்குமணன், மன்னார்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story