ஆவடி அருகே வீட்டில் பதுக்கிய 2,500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்


ஆவடி அருகே வீட்டில் பதுக்கிய 2,500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:18 PM GMT (Updated: 2017-08-23T04:48:13+05:30)

ஆவடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2,500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவடி,

ஆவடி அருகே மோரை வேல்முருகன் நகரில் உள்ள ஒரு வீட்டில் நட்சத்திர ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை இயக்குனரக அதிகாரிகள் மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழு நேற்று முன்தினம் மாலை அந்த வீட்டில் ஆய்வு செய்தது.

அப்போது அந்த வீட்டுக்குள் சில பைகளில் விலை உயர்ந்த 2,515 உயிருள்ள இந்திய நட்சத்திர ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் கடந்த 3 மாதங்களாக இந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து உயிருள்ள நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்துள்ளார்.

இந்த ஆமைகளை தென் கடலோர பகுதி வழியாக படகு மூலம் இலங்கை மற்றும் ராமேசுவரம் எடுத்து சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று விற்பது தெரிந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் குழு சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளின் மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும், இவற்றை வெளிநாடுகளில் 1 கோடி ரூபாய் வரை விற்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story