கொடிக்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தே.மு.தி.க. கிளை செயலாளர் சாவு 2 பேர் காயம்


கொடிக்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தே.மு.தி.க. கிளை செயலாளர் சாவு 2 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:41 PM GMT (Updated: 2017-08-23T05:11:04+05:30)

திருவள்ளூர் அருகே கொடிக்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தே.மு.தி.க. கிளை செயலாளர் இறந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.

திருவள்ளூர்,


திருவள்ளூரை அடுத்த கொப்பூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். தே.மு.தி.க. கட்சியில் கொப்பூர் பகுதி கிளை செயலாளராக இருந்தார்.

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தங்கள் பகுதியில் உள்ள தே.மு.தி.க. கொடிக்கம்பத்துக்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஜெயகாந்தன் முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று தே.மு.தி.க. நிர்வாகிகளான கொப்பூர் பகுதியை சேர்ந்த கோபால், பாலாஜி ஆகியோருடன் சேர்ந்து கொடிக்கம்பத்தை கீழே இறக்க முயன்றார்.

அப்போது மின்சார கம்பியில் கொடிக்கம்பம் எதிர்பாராதவிதமாக உரசியது. மின்சாரம் தாக்கியதால் கொடிக்கம்பத்தை பிடித்துக்கொண்டிருந்த ஜெயகாந்தன் தூக்கி வீசிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்த கோபால், பாலாஜி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மணவாளநகர் போலீசார் உடனே அங்கு சென்று ஜெயகாந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை அறிந்த தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சுதாகர் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஜெயகாந்தன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Next Story