முதுமலை பகுதியில் மழை: மாயார் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்


முதுமலை பகுதியில் மழை: மாயார் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
x
தினத்தந்தி 23 Aug 2017 10:30 PM GMT (Updated: 23 Aug 2017 7:34 PM GMT)

முதுமலையில் பெய்த வரும் மழையால் மாயார் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

மசினகுடி,

முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதியில் 70–க்கும் மேற்பட்ட புலிகள், நூற்றுக்கணக்கான சிறுத்தைப்புலிகள், யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அதற்கு ஏற்ற காலநிலையும், பசுந்தீவனம், தண்ணீர் உள்ளதால் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மேலும் முதுமலையை காண ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் முதுமலை புலிகள் காப்பகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் வனப்பகுதியில் உள்ள 40–க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டதுடன், முக்கிய நீராதாரமாக விளங்கும் மாயார் ஆறும் தண்ணீர் இன்றி வற்றி போனது. இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளும் குடிக்க தண்ணீர் இன்றி கடும் அவதிக்குள்ளாகின.

இதையடுத்து வனத்துறை சார்பாக கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வறட்சியால் வனத்துறையினர் விலங்குகளை காப்பாற்ற திக்குமுக்காடிய நிலையில் கடந்த சில நாட்களாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த வனப்பகுதி தற்போது மீண்டும் பத்துயிர் பெற்று பச்சை பசேல் என மாறி வருகிறது.

குறிப்பாக தொடர் மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளதுடன் மாயார் ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடும் வறட்சிக்கு பிறகு மாயார் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த ஒடுவதை கண்டு வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மான்கள், காட்டு யானைகள், காட்டெருமைகள் போன்றவை கூட்டம், கூட்டமாக திரிவதை காணமுடிகிறது. வனவிலங்குகள் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் அமைந்துள்ள தொரப்பள்ளி – கக்கநல்லா சாலை மற்றும் தெப்பகாடு – மசினகுடி சாலை ஓரங்களில் உலா வருவதால் அவற்றை காணும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் முதுமலையில் மீண்டும் வசந்த காலம் தொடங்கி உள்ளது என்றே கூறலாம்.


Related Tags :
Next Story