மலை ரெயில் வருவதற்கு தாமதம் குன்னூர் லெவல்கிராசிங்கில் கடும் போக்குவரத்து நெரிசல்


மலை ரெயில் வருவதற்கு தாமதம் குன்னூர் லெவல்கிராசிங்கில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 25 Aug 2017 10:15 PM GMT (Updated: 25 Aug 2017 8:42 PM GMT)

மலை ரெயில் வருவதற்கு தாமதம் ஆனதாலும், குன்னூர் லெவல் கிராசிங்கில் கேட் மூடப்பட்டதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

குன்னூர்,

குன்னூரில் உள்ள வெலல் கிராசிங் பகுதியில் 4 சாலைகள் சந்திப்பு உள்ளது. அங்கு ஊட்டி சாலை, ஓட்டுப்பட்டரை சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பஸ் நிலைய சாலை ஆகியவை சந்திக்கின்றன, நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக வெவல் கிராசிங் இருப்பதால் இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் மலை ரெயில் செல்லும் போது அங்குள்ள ரெயில் கேட் மூடப்பட்டால் இன்னும் போக்குவரத்து பாதிப்பு அதிகமாகிறது. இதனால் அங்கு பணியில் இருக்கும் போலீசார் போக்குவரத்தை சரி செய்ய சிரமப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு வழக்கம் போல் மலைரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டது. உந்து சக்தி குறைவு காரணமாக கல்லார் காட்டேரி இடையே ரெயில் நின்று நின்று வந்தது. காட்டேரி மற்றும் குன்னூர் ரெயில் நிலையம் இடையே வந்தபோது உந்து சக்தி குறைவடைந்ததால் காந்திபுரம் அருகே ரெயில் நடுவழியில் நின்று விட்டது. இந்த தகவல் குன்னூர் ரெயில் நிலையத்துக்கு கிடைக்க வில்லை.

இதனிடையே மலை ரெயில் வருவதற்கு ஆயத்தமாக லெவல் கிராசிங்கில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் ரெயில் வெலவல் கிராசிங்கை தாண்டாமல் காந்திபுரத்திலேயே நின்று கொண்டிருந்தது. 20 நிமிடத்துக்கு பிறகு நீராவியை ஏறியதால், மலைரெயில் அங்கிருந்து புறப்பட்டு, லெவல் கிராசிங்கை தாண்டி குன்னூர் ரெயில் நிலையத்தை அடைந்தது.

ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் நான்கு சாலைகளிலும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.


Next Story