கோவை விமான நிலையத்தில் ரூ.10 கோடி செலவில் கூரை அமைக்கும் பணி
கோவை விமான நிலையத்தில் ரூ.10 கோடி செலவில் கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் இனி பயணிகள் மழை, வெயிலினால் பாதிக்கப்படமாட்டார்கள்.
கோவை,
கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2010–ம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ் மாநாட்டு நடந்ததையொட்டி விமான நிலையத்தின் முன்பகுதி புதிதாக வடிவமைக்கப்பட்டு மேலும் பல வசதிகளும் செய்யப்பட்டன. ஆனால் விமான நிலையத்தின் முன்புறம் கூரை அமைக்கப்படாததால் பயணிகள் வரும்போதும், விமானத்திலிருந்து இறங்கி வெளியே செல்லும்போதும் மழையில் நனையும் நிலையும், வெயிலினால் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தின் முன்பகுதியில் கூரை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக விமான நிலையத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த குடை போன்ற அமைப்புகள் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக விமான நிலையத்தின் முன்புறம் 100 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரத்துக்கு கூரை அமைக்கப்படுகிறது. ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பிரமாண்ட கூரைக்காக ராட்சத கிரேன்களை கொண்டு பெரிய இரும்பு தூண்கள் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் மீது கூரை அமைக்கப்பட உள்ளது. புதிய கூரை அமைக்கப்படுவதின் மூலம் விமான நிலையத்திலிருந்து பயணிகள் வரும் போதும், கார்களிலிருந்து இறங்கி விமான நிலையத்துக்குள் செல்லும் போதும் மழையில் நனைய மாட்டார்கள். அதே போல சுட்டெரிக்கும் வெயிலும் அவர்களை தாக்காது.
இதுகுறித்து கோவை விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் கூறியதாவது:–
கோவை விமானநிலையத்துக்கு வரும் பயணிகளின் கார்கள் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் கூரையின் கீழ் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இதனால் மழை மற்றும் வெயில் பயணிகளை தாக்காது. ஏற்கனவே உள்ள விமான நிலைய கட்டிடத்திலிருந்து 30 மீட்டர் அகலத்துக்கு இந்த கூரை அமைக்கப்படுகிறது.
தற்போது 5 விமான நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. எதிர்காலத்தில் புதிய விமான சேவை தொடங்கும் போது அந்த விமானங்களின் அலுவலகங்கள் அமைக்கும் வகையில் தற்போது கூடுதலாக இட வசதி செய்யப்பட உள்ளது. இது தவிர பயணிகளை வழியனுப்ப வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஓட்டல்கள், பரிசு பொருட்கள் விற்பனை செய்ய 10 கடைகளும் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 3 மாதத்தில் முடிவடைய உள்ளன.
கோவை விமான நிலையத்தின் முன்புறம் தற்போது 300 கார்கள் வரை நிறுத்த முடியும். ஆனால் மேலும் சில விமான சேவைகள் புதிதாக தொடங்கப்பட உள்ளதால் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே எதிர்காலத்தில் இன்னும் கூடுதல் கார்கள் நிறுத்த இடம் தேவை. இதற்கான இடத்தை ஆர்ஜிதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் உள்ளனர். அவர்கள் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்வதற்கு தற்போது ரெயிலை தான் பயன்படுத்தி வருகின்றனர். அந்த பக்தர்களின் வசதிகாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வருகிற 1–ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் கோவை–புனேக்கு புதிய விமான சேவையை தொடங்குகிறது. கோவையிலிருந்து அதிகாலை 1 மணிக்கு புறப்படும் அந்த விமானம் புனேக்கு காலை 7 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து அந்த விமானம் டெல்லிக்கு செல்லும். புனே செல்லும் பக்தர்கள் அங்கிருந்து ஷீரடிக்கு பஸ் அல்லது காரில் செல்லலாம். ஷீரடி சென்ற பின்னர் பக்தர்கள் புனேயிலிருந்து இரவு புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானம் மறுநாள் அதிகாலை கோவை வந்து சேரலாம். இந்த புதிய விமான சேவை ஷீரடி செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.