நீட் தேர்வால் தமிழக ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நிராசையாகியுள்ளது


நீட் தேர்வால் தமிழக ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நிராசையாகியுள்ளது
x
தினத்தந்தி 25 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-26T02:16:14+05:30)

நீட் தேர்வால் தமிழக ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நிராசையாகியுள்ளது என தா.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

மதுரை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் எழுதிய கார்ல் மார்க்ஸ் வாழ்வும், பணியும் என்ற புத்தகம் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. முன்னாள் எம்.பி. அழகிரிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சரவணன் வரவேற்றார். பேராசிரியர் சாலமன் பாப்பையா புத்தகத்தை வெளியிட்டார்.

முன்னதாக தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி சீர்திருத்தம் என்ற பெயரால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவி செய்து வருகிறது. விவசாயிகள், தொழிலாளிகளின் உழைப்பால் அரசின் தவறான கொள்கைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது. அவர்களின் உழைப்பால் தான் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் மாநில அரசின் வரிவிதிப்பு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவுப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. உணவகங்களில் சாப்பிடுவதற்குகூட யோசிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த வரியால் கிடைக்கும் வருவாயை நதிகள் இணைப்பு, விவசாயிகள் முன்னேற்றத்திற்கோ செலவழிக்கப் போவதில்லை. மோடியின் ஆட்சியில் மாநிலங்களின் ஆட்சியாளர்கள் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்கள் வருமான வரித்துறை மூலம் மிரட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நீட் தேர்வால் தமிழக ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நிராசையாகியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story