முருகனின் 13 நாள், தொடர் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது மனைவி நளினியும் போராட்டத்தை கைவிட்டார்


முருகனின் 13 நாள், தொடர் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது மனைவி நளினியும் போராட்டத்தை கைவிட்டார்
x
தினத்தந்தி 31 Aug 2017 5:30 AM IST (Updated: 31 Aug 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகனின் 13 நாள் தொடர் உண்ணாவிரதம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து அவரது மனைவி நளினியும் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முருகன் 26 ஆண்டுகள் ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் அவர் வாழ்க்கை மீது விரக்தி கொண்டார். எனவே அவர் ‘ஜீவசமாதி’ எனும் உண்ணாமல் உடலை வருத்தி உயிர் துறக்க முடிவு செய்து கடந்த 18-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இதனால் அவரது உடல்நிலை பாதிப்புக்குள்ளானது. ஜெயில் டாக்டர்கள், வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் முருகன் இருந்தார். எனினும் ஜெயில் அதிகாரிகள் அவ்வப்போது அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி வலியுறுத்தி வந்தனர். எனினும் அவர் விடாப்பிடியாக தனது கொள்கையில் உறுதியாக இருந்தார்.

தொடர் உண்ணாவிரதத்தால் முருகனின் உடல் சோர்வு காரணமாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் மனைவி நளினி திடீரென கடந்த 28-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அதுதொடர்பாக அவர் சிறைத்துறையினரிடம் அளித்த மனுவில், என் கணவரின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இவரது உண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.

இந்த நிலையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன் நேற்று காலை வேலூர் பெண்கள் ஜெயிலில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவரது இந்த ஆய்வின் போது நளினியிடம் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி டி.ஐ.ஜி. பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது நளினி டி.ஐ.ஜி.யிடம் தனது கணவர் உண்ணாவிரதத்தை கைவிடும் வரை நானும் தொடர் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலுக்கு சென்றார். அங்கு அவரும், ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் முருகன் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். ‘பேச்சுவார்த்தையில் நீ உண்ணாவிரதத்தை கைவிட்டால் தான் உனது மனைவியும் உண்ணாவிரதத்தை கைவிடுவார்’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் மாறிய முருகன் நேற்று 13-வது நாளாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தை 2 இளநீர் மற்றும் பால் குடித்து கைவிட்டார்.

இதன் மூலம் முருகன் தனது ஜீவசமாதி எனும் ஆன்மிக பயணம் மனைவியின் பாசப்போராட்டத்தினால் 13-வது நாளிலேயே முடிந்தது.
இதையடுத்து முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக பெண்கள் ஜெயிலில் உள்ள நளினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நளினியும் தனது உண்ணாவிரதத்தை இளநீர் மற்றும் ஜூஸ் குடித்து கைவிட்டார்.

ஜெயில் முன்பு காத்திருந்த செய்தியாளர்கள்

முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்ததால் அவரது உடல் நிலை மோசமாக இருந்தது. எனவே அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான ஜெயில் வளாகத்திற்குள் ஆம்புலன்சும், அவரை பாதுகாப்பாக அழைத்து செல்ல போலீசாரும் தயாராக வைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக செய்தி சேகரிக்க செய்தியாளர்கள், டி.வி.கேமராமேன்கள், புகைப்பட கலைஞர்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சிறை எதிரே சாலையோரம் காத்திருந்தனர்.

தொடக்கம் முதல் முடிவு வரை...

ஜடாமுடி தரித்த முருகன் தீவிர கிருஷ்ணர் பக்தர் என்பதால் தனது ‘ஜீவசமாதி’ எனும் உண்ணாவிரதத்தை கடந்த 18-ந் தேதியில் இருந்து தொடங்கினார். 19-ந் தேதி அவர் அவர் தனது மனைவி நளினியை சந்திக்க மறுத்தார். 20-ந் தேதி உறவினர்கள் மற்றும் நளினியை சந்திக்கும் சலுகை ரத்து செய்யப்பட்டது. 21-ந் தேதி தொடர் உண்ணாவிரதம் காரணமாக அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. 22-ந் தேதி மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர். 23-ந் தேதி 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்ட முருகனை 26-ந் தேதி சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு சந்தித்தார். அப்போது அவர் முருகனிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கூறினார். எனினும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

28-ந் தேதி தனது கணவர் முருகனை காப்பாற்றக்கோரி நளினி உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதையடுத்து 30-ந் தேதி (நேற்று) சிறைத்துறை டி.ஜி.பி. பாஸ்கரன் பேச்சுவார்த்தைக்கு பின் முருகன் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். கணவர் கைவிட்டதால் மனைவி நளினியும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

முருகனின் 2 கோரிக்கைகள்

ஜெயிலில் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பது ஜெயில் விதிகளை மீறுவதாகும். அவ்வாறு விதி மீறும் கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்கும் சலுகை உள்பட ஏனைய சலுகைகள் ரத்து செய்யப்படும். முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டதால் அவருக்கு மனைவி நளினி மற்றும் உறவினர்கள், பார்வையாளர்களை சந்திக்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் முருகன் தனது உண்ணாவிரதத்தை கைவிடும் முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரனிடம் 2 கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் தனது மனைவி நளினியை பார்க்க அனுமதிக்க வேண்டும். மேலும் என்னை பார்க்க வரும் உறவினர்களையும், பார்வையாளர்களையும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
முருகனின் இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து டி.ஐ.ஜி. பாஸ்கரன் தான் முடிவு எடுப்பார் என்று ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story