குப்பையை தரம் பிரித்து கொடுக்காதவர்களின் வீடுகளில் மின்இணைப்பு துண்டிக்கப்படும், கலெக்டர் எச்சரிக்கை


குப்பையை தரம் பிரித்து கொடுக்காதவர்களின் வீடுகளில் மின்இணைப்பு துண்டிக்கப்படும், கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2017 4:45 AM IST (Updated: 31 Aug 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

‘உன்னத ஊட்டி’யை உருவாக்கும் நடவடிக்கையாக, குப்பையை தரம் பிரித்து கொடுக்காதவர்களின் வீடுகளில் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாக உள்ளதால், மாவட்டத்தின் அழகை பாதுகாக்கும் வகையில் ‘உன்னத ஊட்டி‘ என்ற திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தூய்மை திட்டத்தின் கீழ் மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள 35 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திலேயே மிக அழகான மலை மாவட்டமாக நீலகிரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் விரும்பி வரக்கூடிய இந்த மாவட்டத்தை பாதுகாக்க வேண்டியது அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு மக்களின் கடமையாகும். ஊரக பகுதிகளில் உள்ள 35 ஊராட்சிகளில் ‘உன்னத ஊட்டி‘ திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள பெரிய கிராமங்களுக்கு ஒரு குப்பை பிரித்தல் கூடம் வீதம் மொத்தம் 132 கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த கூடத்திற்கு அருகே உள்ள கிராமங்களில் இருந்து மக்காத குப்பைகள் மட்டும் கொண்டு வரப்படும். கூடத்தில் 6 தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ரப்பர் பொருட்கள், காட்போர்டு குப்பைகள், மின்னணு கழிவுகள் மற்றும் இதர குப்பைகள் தனியாக பிரித்து வைக்கப் படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நியமிக்கப்பட்டு உள்ள தூய்மை காவலர்கள் 150 பேர் ஒவ்வொரு வீடாக சென்று மக்காத குப்பைகளை சேகரித்து கூடத்தில் கொட்டுவார்கள். கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எளிதில் மக்கக்கூடிய உணவு பொருட்களை தனியாக குழி தோண்டி, அதில் கொட்ட வேண்டும். வனவிலங்குகள் அந்த உணவை சாப்பிடாத வகையில், அதன் மேல்பகுதியில் இரும்பு தகடுகள் கொண்டு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும்.

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மக்காத குப்பைகளை தனியாக பிரித்து வீட்டிற்கு வரும் தூய்மை காவலர்களிடம் பொதுமக்கள் வழங்க வேண்டும். மேலும் கிராம மக்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களிடம் இதுகுறித்து விளக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்.

சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் வீடுகளுக்கு வெளியே குப்பைகளை கொட்டுபவர்கள் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டால் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, ‘உன்னத ஊட்டி‘யை உருவாக்க பொதுமக்கள் நீலகிரி மாவட்ட அழகையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மேகநாதன், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story