மாணவர்கள் ஆங்கில அறிவை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுரை


மாணவர்கள் ஆங்கில அறிவை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுரை
x
தினத்தந்தி 31 Aug 2017 5:45 AM IST (Updated: 31 Aug 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

லாஸ்பேட்டை அரசு பள்ளியில் ஆய்வு செய்த கவர்னர் கிரண்பெடி, மாணவர்கள் தங்கள் ஆங்கில அறிவை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி அரசு பள்ளிகளுக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். அவர், புதுவை நகர் மற்றும் கிராமப்புறங்களில் கல்வித்தரம் எப்படி இருக்கிறது? என்பதையும் அறிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் அவர் லாஸ்பேட்டையில் உள்ள நாவலர் நெடுஞ்செழியன் அரசு பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளியில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டார்.

பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். பிளஸ்–2 முடித்ததும் உயர்கல்வி படிக்க என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்? என்று எழுதி கேட்டார். அதன்படி மாணவர்கள் தங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:–

மாணவர்கள் தங்கள் ஆங்கில அறிவை நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் செய்தித்தாள் படிக்க வேண்டும். மேலும் தற்போது கம்ப்யூட்டர் அறிவு மிகவும் தேவை. தற்போது நிறைய தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவ கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தையும், பள்ளிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுடைய தந்தை யாராவது குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தனியாக ஒரு சிகிச்சை பிரிவு உள்ளது. அங்கு சிகிச்சை பெற்றால் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் குமார், இணை இயக்குனர் கிருஷ்ணராஜூ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.


Next Story