76 மீனவர்கள் விடுதலையான நிலையில் தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு
76 மீனவர்கள் விடுதலையான நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்து சென்றனர்.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஓரிரு மாதங்களில் 80 மீனவர்கள் வரை பிடித்துச்செல்லப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணத்தையொட்டி, தமிழக மீனவர்கள் 76 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. அதன்படி நேற்று 76 மீனவர்களும் இந்திய துணைத்தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், மண்டபம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து முத்துஇருளன் (வயது 52), முத்து கிருஷ்ணன் (35), சேகர் (40), ரவி (55) ஆகியோர் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.
அவர்கள், 4 மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி படகுடன் சிறைபிடித்துச்சென்றனர். 4 பேரும் விசாரணைக்குப்பின் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி வருகிற 14–ந் தேதி வரை அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், ராமேசுவரத்தில் இருந்து ஜஸ்டின் (40), சந்திரன் (31), நிரோன்சன் (22), வர்க்கீஸ் (23) ஆகிய 4 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது திடீரென படகின் பலகை உடைந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து 4 மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களையும் மீட்டு காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த 4 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.