பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் சமுதாயம் உயரும்
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் சமுதாயமே உயரும் என்று குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியில் கலெக்டர் லதா கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர் நிதி சட்டத்தின்கீழ் பதிவுபெற்ற குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு கலெக்டர் லதா தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயபிரகாஷ் வரவேற்று பேசினார்.
பின்னர் பயிற்சியில் கலெக்டர் லதா பேசியதாவது:–
இயற்கையின் படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனித இனம்தான். தற்போது மனித இனம் உலகை ஆள்கிறது. சமுதாய அமைப்புகளில் பார்க்கும்போது எந்த சமுதாயம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் தருகின்றதோ அந்த சமுதாயமே உயர்ந்துள்ளது. ஒரு சமுதாயம் உயர வேண்டும் என்றால், அங்கு பெண்கள் குழந்தைகள் நலம் உயர வேண்டும். அதனால் தான் இன்று அரசு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு சட்டங்களையும், முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
மேலும் குழந்தைகள் இல்லங்கள் எப்படி இருக்க வேண்டும், கட்டிடங்களை பாதுகாப்பது குறித்து பல சட்டங்கள் உள்ளன. அவைகளை தெரிந்து கொள்ள வேண்டும், பேரிடர் காலங்களில் குழந்தைகள், ஊனமுற்றோர், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும். எனவே எந்த நேரத்தில் உதவி தேவை என்றாலும் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். அப்போது உடனடியாக தேவையான உதவி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியில் சிவகங்கை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பால்ராஜ் மற்றும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.