சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது


சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 1 Sept 2017 4:30 AM IST (Updated: 31 Aug 2017 11:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் சீனிநயினா முகமது(வயது 30). இவருடைய மனைவி சுபேதாபேகம்(25). கடந்த 2015-ம் ஆண்டு சுபேதாபேகத்திடம் உறவினர் எனக்கூறி அறிமுகமான ஒருவர், சீனிநயினா முகமதுவுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு முதல் தவணையாக ரூ.30 ஆயிரம் தரும்படியும் கேட்டார்.

அதை உண்மை என நம்பிய கணவன்-மனைவி இருவரும் 30 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு அந்த நபர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. பணம் பெற்ற பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

அதன்பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும், இது குறித்து சென்னை ஐகோர்ட்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று எம்.கே.பி.நகரில் உள்ள சுபேதாபேகத்தின் உறவினரிடம் அதேபோல் ஒருவர் அரசு அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ.50 ஆயிரம் கேட்டார். இதுபற்றி அவர், சுபேதாபேகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் தனது கணவருடன் அங்கு சென்று பார்த்தபோது, தங்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்தான் அவர் என்பது தெரிந்தது. அந்த நபரை கையும் களவுமாக பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர், சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மைனுதின்(44) என்பது தெரிய வந்தது. இவர், இதே போல் பலரிடம் சென்னை ஐகோர்ட்டு மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மைனுதின் மீது சென்னை வண்ணாரபேட்டை, ஐகோர்டடு, திருவொற்றியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல மோசடி வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. கைதான மைனுதினிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story