ஊட்டியில் துறவற வாழ்க்கையை தொடங்கிய ஜெயின் சமூக இளம்பெண்
ஊட்டியில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் துறவற வாழ்க்கையை தொடங்கினார். இதையொட்டி அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
ஊட்டி,
ஊட்டியில் நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் ரமேஷ்குமார். இவரது மனைவி மது. இவர்களுக்கு சேத்னா (வயது 24) என்ற மகளும், லக்ஷத் (19) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள். சேத்னா, ஜெயின் துறவற வாழ்க்கையில் அதிக பற்று கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று சேத்னா துறவற வாழ்க்கையை தொடங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் நடைபெற்றது.
இதுகுறித்து சேத்னாவின் தந்தை ரமேஷ்குமார் கூறியதாவது:–
ஜெயின் சமூகத்தில் துறவற வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது. துறவற வாழ்க்கையின் போது சூரியன் உதித்த பின்னர் தான் உணவு மற்றும் நீர் அருந்த வேண்டும். தங்களது வாழ்நாள் முழுவதும் எந்த பகுதிக்கு சென்றாலும் நடைபயணமாக செல்ல வேண்டும். அவர்கள் ஜெயின் கோவில்களில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுவார்கள். அவர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் மீது ஆசை இருக்காது. ஜெயின் துறவிகள் ஆண்டுக்கு இரண்டு முறை தங்களது தலை முடிகளை அவர்கள் கைகளாலே அகற்றி கொள்வார்கள். மேலும் தங்களது சொந்த, பந்தங்களை விட்டு விலகியே இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து இளம்பெண் சேத்னா கூறியதாவது:–
நான் ஊட்டியில் பி.பி.எம். இளங்கலை பட்டப்படிப்பு படித்து, எம்.ஏ. (ஜெயினாலஜி) முதுகலையை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து உள்ளேன். இளம் வயதில் இருந்தே எனக்கு ஜெயின் சமய கோட்பாடுகளில் அதிக ஈடுபாடு இருந்தது. தாய் மது எனக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
உலக வாழ்க்கையில் இருந்து மோட்ச நிலையை அடைய வேண்டும் என்று பகவான் மகாவீரரின் போதனையை பின்பற்றி துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இதுகுறித்து எங்களுடைய ஜெயின் குருக்களிடம் கேட்டறிந்து, துறவற வாழ்க்கை மேற்கொள்ள உறுதிப்படுத்தி கொண்டேன்.
ஆசை, பொறாமை, பகை, கோபம், எரிச்சல், விரக்தி, சுயநலம், அகந்தை போன்றவற்றை முழுமையாக அகற்றி ஜெயின் சமய கோட்பாடுகளை கடைப்பிடித்து துறவற வாழ்க்கை மேற்கொள்ள முடிவு எடுத்தேன். இதன் மூலம் மற்றவர்களை நேசிப்பது, ஐம்புலங்களை அடக்குவது, நற்பண்புகளை வளர்ப்பது உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டும் என ஜெயின் குருக்களின் உபதேசத்துக்கு கட்டுப்பட்டு துறவற வாழ்க்கையை இன்று (நேற்று) முதல் தொடங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி துறவற வாழ்க்கை மேற்கொள்ள இருக்கும் சேத்னாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஊட்டியில் ஊர்வலம் நடைபெற்றது. ஊட்டி லோயர் பஜாரில் உள்ள ஜெயின் கோவிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி மெயின் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, லோயர் பஜார், மத்திய பஸ் நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சேத்னா அழைத்து வரப்பட்டார். இதில் திரளான பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து கோவிலில் சேத்னா அணிந்திருந்த அலங்கார உடைகள், நகைகள் ஆகியவை கழற்றி வைக்கப்பட்டது. பின்னர் அவருக்கு வெள்ளை உடை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து சேத்னா துறவற வாழ்க்கை மேற்கொள்வதற்கான சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஜெயின் சமூக குருக்கள் விஜயராஜ், வினோத்முனி மகாராஜ், அபினோ ஆகியோர் முன்னிலையில், சேத்னா உறுதி எடுத்துக்கொண்டு ஜெயின் துறவற வாழ்க்கையை தொடங்கினார். மேலும் வருகிற டிசம்பர் மாதம் 4–ந் தேதி சத்திஷ்கர் மாநிலத்தில் சேத்னா சாமியாராக உள்ளார்.