அ.தி.மு.க. அரசு மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை காடுவெட்டி ஜெ.குரு பேட்டி
அ.தி.மு.க. அரசு மக்களின் குறைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று மேட்டுப்பாளையத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி ஜெ.குரு கூறினார்.
மேட்டுப்பாளையம்,
தியாகிகள் தினத்தையொட்டி விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகிற 17–ந்தேதி சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது. இது குறித்த விளக்க கலந்துரையாடல் கூட்டம் நேற்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு பா.ம.க. சட்ட பாதுகாப்பு அணி மாநில துணை செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில துணை தலைவர் எம்.ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.தங்கவேல் பாண்டியன் வரவேற்றார்.
இதில், சமூக நீதி மாநாடு பற்றி வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி ஜெ.குரு விளக்கிபேசினார். கூட்டத்தில், மாநில துணை பொது செயலாளர்கள் ரவிச்சந்திரன், மின்னல் சிராஜ், பரசுராமன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சமூக நீதி பேரவை மாவட்ட தலைவர் பழனிசாமி நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி ஜெ.குரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விழுப்புரத்தில் நடக்கும் மாநாட்டில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து அ.தி.மு.க. அரசு ஆட்சி அமைத்த பிறகு மக்களின் குறைகளை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளரா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று விட்டார். பின்னர் அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ளனர்.
கர்நாடக அரசு மேகதாது அணை, ஆந்திரா பாலாறு அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதை எல்லாம் அமைச்சர்கள் கண்டு கொள்ளாமல் 5 வருடத்தில் எவ்வளவு தொகையை கொள்ளை அடிக்கலாம் என்பது குறித்தே திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
விவசாயிகள், நீட் தேர்வு பிரச்சினைகள் தீரவில்லை. அ.தி.மு.க.வை பா.ஜனதா கட்சி இயக்கி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பேச்சை கேட்காவிட்டால் இவர்களும் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்பதே உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.