அசல் ஓட்டுனர் உரிமம்: அரசின் உத்தரவுக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு
வாகன ஓட்டிகள் வைத்திருப்பது அசல் உரிமம் தான என்பதை கண்டறியும் தொழில்நுட்பமே இல்லாத நிலையில், அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்ற அரசின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரை,
வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முறையான ரோடுகளே இல்லாமல், குண்டும், குழியுமான உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரோடுகளை வைத்துக்கொண்டு அசல் ஓட்டுனர் உரிமம் மட்டும் கேட்கும் மாநில அரசின் போக்கை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட லெனின் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுசெயலாளர் பாஸ்கர் கூறியதாவது:–
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். ஓட்டுனர் உரிமம் தொலைந்து போகும் பட்சத்தில், மீண்டும் அதனை பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அலைய வேண்டும்.
மேலும், ஓட்டுனர் உரிமம் அசலா? என்பதை கண்டறிவதற்கான எந்த நவீன தொழில்நுட்ப வசதிகளும் போலீசாரிடம் கிடையாது. முதலில் ரோடுகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஓட்டுனர் உரிமங்களையும் ஆன்லைனில் பிரதி எடுத்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சாத்தையா கூறியதாவது:–
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஓட்டுனர் உரிமத்தின் நகல் பிரதிகளை மட்டுமே வாகனங்களை இயக்கும்போது டிரைவர்கள் எடுத்து செல்வது வழக்கம். மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா என அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைனுக்கு மாற்றி வரும் வேளையில் தமிழக அரசு அசல் உரிமம் வேண்டும் என்று சொல்வது தலைகீழாக உள்ளது. லாரி ஓட்டுனர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். அப்போது ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனால் திரும்ப பெறுவது சிரமம். எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.