கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஒருதலைக்காதலன் ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்
பெங்களூருவில், கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு,
பெங்களூருவில், கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த அவருடைய ஒருதலைக்காதலனும் ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
மாணவி தூக்குப்போட்டு தற்கொலைபெங்களூரு கே.பி.அக்ரஹாரத்தில் உள்ள மாநகராட்சி குடியிருப்பில் வசித்து வருபவர் சிக்கசாமி. இவருடைய மகள் காமினி (வயது 19). இவர், ராஜாஜிநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்தநிலையில், அதே பகுதியில் வசித்து வரும் மல்லேஷ் என்பவர் காமினியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மல்லேஷ் தனது காதலை காமினியிடம் வெளிப்படுத்தியும் அவர் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.
இருப்பினும், மல்லேஷ் தொடர்ந்து காமினியின் பின்னால் சென்று தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது காமினி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை பார்த்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.
ஒருதலைக்காதலனும்...இதற்கிடையே, காமினி இறந்த செய்தி கேட்டு மல்லேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதன் தொடர்ச்சியாக அடுத்த சில மணிநேரங்களில் அவர் பின்னிமில் அருகே செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காதலிக்கும்படி காமினிக்கு தொல்லை கொடுத்து வந்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்த மல்லேஷ் ரெயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இருப்பினும், 2 பேரும் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கே.பி.அக்ரஹாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.