கர்நாடக காங்கிரஸ் மகளிர் அணி தலைவிக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு உருவபொம்மையை எரித்து போராட்டம்
பெலகாவி எல்லை பிரச்சினை குறித்து மராட்டியத்திற்கு ஆதரவாக பேசிய லட்சுமி ஹெப்பால்கருக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு,
பெலகாவி எல்லை பிரச்சினை குறித்து மராட்டியத்திற்கு ஆதரவாக பேசிய லட்சுமி ஹெப்பால்கருக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவருடைய உருவபொம்மையை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லட்சுமி ஹெப்பால்கர் சர்ச்சை பேச்சுகர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவியாக இருந்து வருபவர் லட்சுமி ஹெப்பால்கர். இவர் தற்போது பெலகாவி மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், பெலகாவியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 27–ந் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லட்சுமி ஹெப்பால், ‘கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு இடையே பெலகாவி யாருக்கு சொந்தம் என்ற எல்லை பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த எல்லை பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. பெலகாவி மராட்டியத்திற்கு சொந்தம் என்று தீர்ப்பு வந்தால், அதனை வரவேற்று முதல் ஆளாக முழக்கமிடுவேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்‘ என்று கூறியிருந்தார். இது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உருவபொம்மையை எரித்து போராட்டம்இந்த நிலையில், கடந்த மாதம் 27–ந் தேதி லட்சுமி ஹெப்பால்கர் பேசியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி உள்ளது. பெலகாவி மராட்டியத்திற்கு சொந்தம் என்ற அர்த்தத்தில் பேசிய லட்சுமி ஹெப்பால்கருக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். மேலும் லட்சுமி ஹெப்பால்கரின் பேச்சை கண்டித்து நேற்று பெங்களூருவில் கன்னட அமைப்பினர் அவருடைய உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் கன்னட அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோரிக்கைஇந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவை, கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், பெலகாவி மராட்டியத்திற்கு சொந்தம் என்று பேசியுள்ள லட்சுமி ஹெப்பால்கரை மகளிர் அணி தலைவி பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து மாநில தலைவர் பரமேஸ்வர் முடிவு எடுப்பார் என்று வாட்டாள் நாகராஜிடம், தினேஷ் குண்டுராவ் கூறியதாக தெரிகிறது. பின்னர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–
இன்று போராட்டம்பெலகாவி கர்நாடகத்திற்கு சொந்தமானது. அதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது. கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவியாக இருந்து கொண்டு, மராட்டியத்திற்கு ஆதரவாக பேசிய லட்சுமி ஹெப்பால்கர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுதொடர்பாக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவிடம் தெரிவித்துள்ளேன். அவர், லட்சுமி ஹெப்பால்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ் குண்டுராவ் நடவடிக்கை எடுத்தாலும் சரி, எடுக்கவில்லையென்றாலும் சரி, லட்சுமி ஹெப்பால்கரை கண்டித்து, பெலகாவியில் நாளை (அதாவது இன்று) கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். கர்நாடகத்தில் இருந்து மராட்டியத்திற்கு ஆதரவாக பேசிய லட்சுமி ஹெப்பால்கர் கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.