சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு


சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
x
தினத்தந்தி 1 Sept 2017 4:15 AM IST (Updated: 1 Sept 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. இரு அணிகளும் ஒரே நேரத்தில் சிலைகளுக்கு மாலை அணிவிக்க செல்லும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், அண்ணா சிலைக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியில் இருந்து 12 மணிக்குள் டி.டி.வி.தினகரனால் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக்கேயன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி வாங்கி உள்ளதாக தெரியவருகிறது.

மேலும் புதுக்கோட்டை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கிளையின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் பிள்ளையார் தண்ணீர் பந்தலில் உள்ள மேற்படி தொழிற்சங்கத்தின் மண்டல அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரியவருகிறது.

அண்ணா சிலை மற்றும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க இரு தரப்பினரும், ஒரே நாளில் ஒரே நேரத்தில் வர உள்ளதாகவும், இருதரப்பிலும் தலா 10 ஆயிரம் பேர், சுமார் ஆயிரம் வாகனங்களில் வந்து கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிய வருகிறது. அவ்வாறு இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு செல்லும்போது, இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வண்ணம் சட்டம் ஒழுங்கை பராமரிக்க 1 முதல் 4 பேருக்கு மிகாமல் கூட்டம் கூட்டாமலும், ஊர்வலமாக செல்லாமலும், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144(1)-ன் கீழ் தடை விதித்து, இதன் மூலம் ஆணையிடப்படுகிறது. இந்த 144 தடை உத்தரவு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் (புதுக்கோட்டை, இலுப்பூர், அறந்தாங்கி கோட்டம்) நேற்று மாலை 6 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை அமலில் இருக்கும். இந்த 144 தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்தை கட்டுப்படுத்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story