விழுப்புரம் ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டரிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு
விழுப்புரம் ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் நேற்று விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பொது நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
விழுப்புரம்– புதுச்சேரி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பழுது காரணமாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் கடந்த மாதம் முடிவடையும் என்று அறிவித்தும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் மேம்பாலத்தை போக்குவரத்திற்காக திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வரும் கீழ்பெரும்பாக்கம் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறியுள்ளது. மேலும் திரு.வி.க. வீதி, நாப்பாளைய தெரு, கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை, சண்முக பெருமான் தெரு, ஏரிக்கரை சாலை முழுவதும் பெரிய அளவிலான பள்ளங்களாக மாறியுள்ளன.
விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் வரை இரு மார்க்கத்திலும் செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பள்ளி– கல்லூரி மாணவர்களும் படுமோசமான நிலையில் உள்ள சாலைகளினால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.
எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து புதிய சாலைகளாக மாற்றித்தர வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.