கர்நாடகத்தில் அ.தி.மு.க. வளர நீங்கள் என்ன செய்தீர்கள்? வா.புகழேந்திக்கு, முன்னாள் மாவட்ட செயலாளர் கேள்வி
கர்நாடகத்தில் அ.தி.மு.க. வளர நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மாநில செயலாளர் வா.புகழேந்தியிடம், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.பி.யுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் அ.தி.மு.க. வளர நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மாநில செயலாளர் வா.புகழேந்தியிடம், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.பி.யுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடக மாநில அ.தி.மு.க. பெங்களூரு மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.பி.யுவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நீங்கள் என்ன செய்தீர்கள்?மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் உங்களை(வா.புகழேந்தி) நியமித்தார். ஆனால் அவர் உயிருடன் இருக்கும் வரை நீங்கள்(வா.புகழேந்தி) தமிழகத்திற்கு வரவில்லை. நீங்கள் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு கர்நாடக அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் என் பின்னால் நிற்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்.
கர்நாடகத்தில் அ.தி.மு.க. வளர நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நீங்கள் தமிழகத்திற்கு வந்து வேறொருவரின் பின்னால் நிற்கிறீர்கள்.
யாரோ ஒருவரின் பின்னால்...கர்நாடகத்தில் கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் ஒற்றுமை கெடக்கூடாது. நீங்கள் கர்நாடகத்திற்கு வந்து இங்குள்ள கட்சி தொண்டர்களை அரவணைத்து ஜெயலலிதா அளித்த பதவியை நல்ல முறையில் பயன்படுத்தி செயலாற்றுங்கள். யாரோ ஒருவரின் பின்னால் நிற்பதை நீங்கள் கைவிட வேண்டும். இல்லையேல் நீங்கள் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல பிரச்சினைகளை சந்தித்தது. பல அணிகளாக உடைந்தது. பின்னர் நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம். இது மகிழ்ச்சியான தருணம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.