வறுமையற்ற இந்தியாவை உருவாக்க மாணவ- மாணவிகள் முன்வர வேண்டும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பேச்சு


வறுமையற்ற இந்தியாவை உருவாக்க மாணவ- மாணவிகள் முன்வர வேண்டும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பேச்சு
x
தினத்தந்தி 1 Sept 2017 4:15 AM IST (Updated: 1 Sept 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

வறுமையற்ற இந்தியாவை உருவாக்க மாணவ- மாணவிகள் முன்வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

வெள்ளியணை,

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தாந்தோன்றி ஒன்றியம் கே.பி.தாழைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளையனே வெளியேறு நினைவு தினவிழா நடைபெற்றது. மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மகாத்மா காந்தியடிகள் 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கி செய் அல்லது செத்துமடி என்ற வார்த்தைகளை கூறி சுதந்திர வேட்டையை சுதந்திர போராட்ட வீரர்களிடம் நாடு முழுவதும் ஏற்படுத்திய நிகழ்ச்சியின் 75-வது ஆண்டு நிறைவு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தருணத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் பொன் பொருள், உயிர்களை தியாகம் செய்து வாங்கி கொடுத்த சுதந்திரத்தை நாமும், நம் சந்ததியினரும் காப்பதுடன் நாட்டை மேலும் வளம் பெறச்செய்யும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.

குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும். சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சாதி, மத வேறுபாடு இல்லா இந்தியா, ஊழல் இல்லா இந்தியா, தீவிரவாதம் இல்லாத இந்தியா, கல்லாமை இல்லா இந்தியா, வறுமையற்ற இந்தியாவை உருவாக்க மாணவ- மாணவிகள் முன்வர வேண்டும். ஒழுக்கத்தை கடைபிடித்து நமது பெற்றோர்களையும், நமது ஆசிரியர்களையும் மதித்து நடந்து கொள்ள நம்மை செம்மை படுத்திக்கொள்வதுடன் நமது நாட்டையும் செம்மைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து புதிய இந்தியாவை 2022-க்குள் உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து புதிய இந்தியா 2022 தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளுடன் கலெக்டர் உரையாடினார். இதில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், ஆசிரிய- ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

Next Story