தினகரன் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கத்தியுடன் புகுந்த வாலிபரால் பரபரப்பு


தினகரன் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கத்தியுடன் புகுந்த வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Sept 2017 5:45 AM IST (Updated: 1 Sept 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தினகரன் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கத்தியுடன் புகுந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனால் மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் நேற்று காலை நின்று கொண்டிருந்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் கூட்டத்திற்குள் புகுந்தார். அவர் மீது சந்தேகப்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் அவரிடம் நீங்கள் யார்? என விசாரித்தனர். அதற்கு அந்த நபர் சரியாக பதில் அளிக்காமல் கத்தியை காட்டி மிரட்டினார்.

இதுபற்றி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்தார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் தவிர வர்த்தக நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

போலீசாரும், அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர்களும் விரட்டி சென்றபோது அந்த வாலிபர் மாடி படிகளில் வேகமாக ஏறி மேல் தளத்தை நோக்கி ஓடினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் விடாமல் விரட்டி சென்றனர். வாலிபர் 12-வது மாடிக்கு சென்று பதுங்கி கொண்டார். போலீசார் அங்கு சென்று அவரை தேடினார்கள். பின்னர் பதுங்கி இருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரை போலீசார் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்திற்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து விசாரணைக்காக கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் மூர்த்தி (வயது35) என்பதும், திருச்சியை அடுத்த குமார வயலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், தான் ஒரு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி.

அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் வேலைகள் செய்த வகையில் ரூ.4 ஆயிரத்து 500 நிலுவை தொகையை வாங்குவதற்காக வந்ததாகவும், இன்று (நேற்று) பெயிண்டிங் வேலை எதுவும் இல்லாததால் ஒரு வாழை தோட்டத்தில் வாழை இலை நறுக்கும் வேலை செய்து கொண்டு இருந்ததாகவும், பணம் வாங்குவதற்காக நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி கத்தியுடன் திருச்சிக்கு வந்ததாகவும் கூறி இருக்கிறார்.

அவர் கூறியது உண்மை தானா? என போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளர் மற்றும் பாதுகாவலர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் மூர்த்தி ஏற்கனவே அங்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மூர்த்தி மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் மாலையில் ஜாமீனில் விடுவித்தனர்.
மேலும் சோமரசம் பேட்டை போலீஸ் நிலையத்தில் மூர்த்தி மீது ஏற்கனவே குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுபற்றிய தகவலை சோமரசம் பேட்டை போலீசாருக்கும் தெரிவித்து உள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் ஏற்கனவே முன்னாள் முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க வந்தவர்களில் ஒருவர் கத்தியுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் எம்.ஜி.ஆர். சிலை அருகே அ.தி.மு.க. (அம்மா) அணியினர் நின்று கொண்டிருந்த பகுதியில் கத்தியுடன் மூர்த்தி சுற்றி திரிந்ததும், போலீசாரை கண்டதும் அவர் ஓட்டம் பிடித்ததும் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஆனால் அவருக்கும், மூர்த்திக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் முழுமையாக தெரிந்த பின்னரே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Next Story