சூடான உணவு பொருட்களை பாலித்தீன் பைகளில் பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை


சூடான உணவு பொருட்களை பாலித்தீன் பைகளில் பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Sept 2017 4:45 AM IST (Updated: 1 Sept 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

சூடான உணவு பொருட்களை பாலித்தீன் பைகளில் பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் உணவு பாதுகாப்பு சட்டம் கையாளுவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார்.

சுகாதார பணிகள் துணை இயக்குனர், பால் வள பதிவாளர், ஊராட்சி நிர்வாக உதவி இயக்குனர், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பல்லடம் தாலுகா வியாபாரிகள், உடுமலை தள்ளுவண்டி உரிமையாளர் சங்கத்தினர், திருமுருகன்பூண்டி நுகர்வோர் சங்கத்தினர், தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்புக்குழு, நல்லூர் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:–

உணவு பாதுகாப்பு சட்டத்தை உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என ஒவ்வொருவரும் சரியான முறையில் கடைபிடிக்கும் வகையில் அலுவலர்கள் அவ்வப்போது கண்காணித்து சுகாதாரத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவகங்கள் மற்றும் விடுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். உணவகங்களில் உணவு தயாரித்து வழங்குவதை ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு தரமான நிலையில் பால் கொள்முதல் செய்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும். பாலின் அடர்த்தியை அதிகப்படுத்த சர்க்கரை, யூரியா மற்றும் ஸ்டார்ச் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் கலப்படங்களை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள ஆடுவதைக்கூடங்களை மேம்படுத்த வேண்டும். வதை கூடங்களில் உள்ள கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சாலையோர உணவு வணிகர்களிடம் தொகை பெற்று கழிவுகளை அகற்ற வேண்டும் உள்பட பல்வேறு கருத்துகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் அவினாசி ரோடு பகுதியில் உள்ள சாலையோர இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும். சாலையோர உணவகங்கள், பேக்கரிகளில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை திரும்ப, திரும்ப பயன்படுத்தி வருகிறார்கள். இதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும். சூடான உணவுகளை பாலித்தீன் பைகளில் பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருட்களின் தரம், கலப்படம் சம்பந்தமாக புகார் தெரிவிக்க 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Next Story